புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
’’2005-06 முதல் 2016 காலாண்டு எம்பிஏ மாணவர்கள் https://dde.pondiuni.edu.in/-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி சமமான தாளை எழுத வேண்டும்’’
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்குநகரத்தின் கீழ் பட்டப் படிப்பை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தைக் கடந்தவர்கள் எம்பிஏ மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டப்படிப்பு தகுதி பெறுவதற்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா முழுவதிலும் இருந்து வரும் மாணவர்களின் பல கோரிக்கைகள் காரணமாக, தொலைதூர கல்வி இயக்குநரகத்தின் கீழ் பட்டப்படிப்பை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தை முடித்த எம்பிஏ மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் வழங்கி உள்ளார்.
2005-06 ஆம் கல்வியாண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அனைத்து எம்பிஏ மாணவர்களும், 2014-15 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான எம்.காம், எம்.ஏ (ஆங்கிலம், சமூகவியல், இந்தி) மாணவர்களும், பாடத்திட்டத்தை முடிப்பதற்கு அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்தை கடந்தவர்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் படிப்பை முடிப்பதற்கும், தங்களை மீண்டும் பதிவு செய்து கொண்டு பட்டப்படிப்புக்கு தகுதி பெறுவதற்கும் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
2005-06 முதல் 2016 காலாண்டு எம்பிஏ மாணவர்கள் https://dde.pondiuni.edu.in/-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி சமமான தாளை எழுத வேண்டும். மறுபதிவு கட்டணமாக 5,000 செலுத்தி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்வுகளுக்கு பதிவு செய்துகொண்டு ஆன்லைன் தேர்வுக்கு தோன்றலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகத்தில் உடனடியாக தங்களை மறுபதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 2022 அமர்வுத் தேர்வுகளுக்கான மறுபதிவு கட்டணம் மற்றும் தேர்வு விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசித் தேதி வரும் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள https://dde.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்