மதிப்பெண் திருப்தி இல்லையா...சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!
" மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் நிலைமை சீரடைந்தவுடன் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும்" என்று மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டு முறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார்.
பொதுத் தேர்வுகள் மற்றும் வரவிருக்கும் போட்டித் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி வாயிலாக மத்திய கல்வி அமைச்சர் உரையாடுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் இந்த காணொலி உரையாடல் ரத்து செய்யப்பட்டு, கல்வி அமைச்சர் பேசும் ஆடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டது.
அந்த ஆடியோவில், "கொரோனா தொற்றுக்கு பிந்தைய உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப பெற்று வருவதாகும், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாட முடியவில்லை" என்றும் தெரிவித்தார். கொரோனா காரணமாக மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு சிபிஎஸ்ஈ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும்,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டுக்கான விரிவான வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக தெரிவித்த அவர், " மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் நிலைமை சீரடைந்தவுடன் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.
முன்னதாக, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மதிப்பீட்டு முறையின் கீழ், 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பும் வழங்கப்பட இருக்கிறது.
இருப்பினும், நேற்றைய ஆடியோ பதிவில் வரவிருக்கும் பொது நுழைவுத் தேர்வுகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நாடு முழுவதும் பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்களுக்கு 2021 ஜேஇஇ (மெயின்) தேர்வு நடைபெற்ற நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் ஏப்ரல் மற்றும் மே கட்டங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த இரண்டு கட்டங்களுக்கான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜேஇஇ தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் தங்களது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது குறிப்பிட்ட பள்ளி வாரியங்கள் நடத்தும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 20 சதவீதங்களுக்குள் மதிப்பெண் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, சிபிஎஸ்இ புதிய மதிப்பீட்டு முறையில் திருப்தியடையாத பல மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத முன்னைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாடு முழுவதும் 2021 நீட் தேர்வு நடத்துவது குறித்த அறிவுப்புகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நீட் தேர்வை ஆன்லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. எனினும், நீட் தேர்வு நடத்தப்படுமா? எப்பொழுது நடக்கும்? என்ற நிச்சயமற்ற சூழலில் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளனர்.