10th 12th Supplementary Mark Sheet: 10, 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள்; எப்போது, எங்கே, எப்படி பெறலாம்?
TN 10th 12th Supplementary Mark Sheet 2025: துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் சார்பில் நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்பு அதாவது இடைநிலை (SSLC) / மேல்நிலை முதலாம் (+1) ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வுகள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 13ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
நடைபெற்ற ஜூன் / ஜூலை 2025, இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை (Original Mark Certificates) 13.10.2025 (திங்கட்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம்.
எங்கே பெறலாம்?
இது துணைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் என்பதால் தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 4-ஆம் தேதி முதல் நடைபெற்றன. 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளும் அதே தேதியில் தொடங்கின. முன்னதாக இதற்கான விண்ணப்பங்கள் மே 22 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பெறப்பட்டன. தொடர்ந்து 12-ஆம் வகுப்புத் துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 25 அன்று வெளியாகின.
அக்டோபர் 13 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்
இவற்றுக்கான மறு மதிப்பீடு, மறு கூட்டல் பணிகள் முடிந்த பிறகு, தற்போது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 13ஆம் தேதி அன்று முதல் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






















