Graduate Kills Self : கட்டாய திருமணத்தால் துடித்த மாணவி.. கனவுகள் கலைந்ததால் மனம் உடைந்து தற்கொலை..
வடக்கு கொரட்டூரில் திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் அந்தப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவருக்கு 22 வயதில் சந்தியா என்ற மகளும் இருந்துள்ளார். இவர் பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கு நல்ல அரசு உத்தியோகத்திற்கு செல்ல ஆசை இருந்துள்ளது. அதனால் TNPSC தேர்வு எழுதுவதற்காக, கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். இவரது வீட்டில் உறவினரான சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விரும்பி, சந்தியாவின் கோச்சிங் சென்டரிலேயே வந்து சேர்ந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், சந்தியாவை ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க கவிதா முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது.
ஆனால், சந்தியாவோ, ஆவடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரத்தை தன்னுடைய அம்மா கவிதாவிடம் தெரிவிக்கவே, அவர் சம்மதத்திற்கு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டார் சந்தியா.
இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி சந்தியா- ராஜா திருமணம் முறைப்படி சேலத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு மறுவீட்டிற்கு திரும்பினர். ஆனால், அடுத்த மூன்று நாட்களில் அதாவது கடந்த 7-ஆம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கணவர் ராஜாவும், அம்மா கவிதாவும் இணைந்து காப்பாற்றி உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்த புகாரின் அடிப்படையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதில், சந்தியாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. மேலும், சந்தியாவிற்கு திருமணமாகி ஒரு வாரமே நிறைவடைந்ததால் ஆர்டிஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் கொரட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours) iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்