உறவுமுறை மாறி திருமணம்! சுட்டிக்காட்டிய உறவினர்கள்.. இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
9 மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேடசந்தூர் அருகே உறவுமுறை மாறி திருமணம் செய்ததை உறவினர்கள் சுட்டிக்காட்டியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணை பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மசாமி 21. இவரது மனைவி தர்ஷனா 19. காதல் திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரம்மசாமி மற்றும் தர்ஷனா உறவுமுறை மாறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரம்மசாமி தனது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்துள்ளார். இந்த நிலையில் வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் பிரம்மசாமிக்கு வேலை கிடைத்துள்ளது.
இதன் காரணமாக பிரம்மசாமி தனது மனைவி மற்றும் குழந்தையோடு நூற்பாலை அருகே உள்ள நாகம்பட்டி நாகாநகரில் உள்ள வாடகை வீட்டில் இரண்டு மாதமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்ஷனாவின் உறவினர்கள் உறவுமுறை மாறி திருமணம் செய்ததை சுட்டிக்காட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த தர்ஷனா வீட்டில் யாரும் இல்லாதபோது தனது 9 மாத கைக்குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற பிரம்மசாமி வீட்டிற்கு சென்றபோது தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறை மாறி திருமணம் செய்ததை உறவினர்கள் சுட்டிக்காட்டியதால் மனம் உடைந்து இளம்பெண் 9 மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















