திருமணத்தை மீறிய உறவு! கண்டித்த மின்வாரிய ஊழியர் கொலை... மனைவி உட்பட 3 பேர் கைது
முதலில் ஒர்க்ஷாப் நடத்தி வந்த முத்துராமலிங்கத்திற்கு கடந்தாண்டு மின்வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது.
விருதுநகர் அருகே கள்ளக்காதலை கண்டித்த மின் வாரிய ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நரிக்குடி - திருச்சுழி சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி இது விபத்தா, கொலையா என பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து நேராக முத்துராமலிங்கம் வீட்டுக்கு சென்றது.
இதனால் போலீசாருக்கு அவரின் மனைவி சுனிதா மேல் சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில், சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பது தெரிய வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அவர் குழந்தை அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்து புளியங்குளம் அருகேயுள்ள அணிகலக்கியேந்தல் கிராமத்தில் குடும்பம் நடத்தியுள்ளார். முதலில் ஒர்க்ஷாப் நடத்தி வந்த முத்துராமலிங்கத்திற்கு கடந்தாண்டு மின்வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது. அவர் மதுரை அரசரடியில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்த அவர் நேரம் கிடைக்கும் போது மட்டும் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே கணவர் ஒர்க்ஷாப்பில் வேலை செய்த மலையரசன் என்ற இளைஞருடன் சுனிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இது முத்துராமலிங்கத்திற்கு தெரிய வரவே மனைவியை கண்டித்துள்ளார். அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுனிதா மலையரசனிடம் தனது கணவரை கொலை செய்து விடுவோம் என கூறி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அவரது தூண்டுதலின் பேரில் மலையரசன் தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கடந்த ஜூலை 1 ஆம் தேதி இரவு வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
பின் உடலை பைக்கில் வைத்து நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே விபத்தில் இறந்தது போல போட்டு விட்டு சென்றுள்ளது விசாரணையில் வெளிவந்தது. இதனையடுத்து சுனிதா, மலையரசன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்