Crime: நடத்தை குறித்து அவதூறாக பேசிய அக்கம்பக்கத்தினர்...விரக்தியில் தீக்குளித்த இளம்பெண்! என்ன நடந்தது?
உடல் முழுவதும் தீ பரவியதில் அலறித் துடித்த மகாலட்சுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த விஜயகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து, அவரது அவரது உடலில் போர்வையைப் போர்த்தி தீயை அணைத்தனர்.
ரவுடியுடன் தன்னை இணைத்து பேசியதால் விரக்தியடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இச்சூழலில் நேற்று முன்தினம் (செப்.20) இரவு மகாலட்சுமி தனது வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
தொடர்ந்து உடல் முழுவதும் தீ பரவியதில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த மகாலட்சுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவர் விஜயகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து, அவரது அவரது உடலில் போர்வையைப் போர்த்தி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து மகாலட்சுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (செப்.19) அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மகாலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அம்முவுக்கும் (36), இவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாய் தகராறு ஏற்பட்டதும், அப்போது மகாலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கும் தகாத உறவு இருப்பதாகக் கூறி அம்மு ஆபாசமாகப் பேசியதும், இதனால், விரக்தி அடைந்த மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் நேற்று மதியம் அம்முவை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)
அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.