உக்கி போடவைத்து, தரையை நாவால் சுத்தம்செய்யுமாறு திணிப்பு.. தலித் மக்களுக்கு நடந்த வன்கொடுமை கொடூரம்
பீகாரின் அவுரங்காபாத் நகரில் இரண்டு தலித்துகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம் அம்பலமாகியுள்ளது.
சாதியின் கோர முகத்தைக் காட்ட நம் நாட்டில் அன்றாடம் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில் பீகாரின் அவுரங்காபாத் நகரில் இரண்டு தலித்துகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம் அம்பலமாகியுள்ளது.
பீகாரில் உள்ளது அவுரங்காபாத் மாவட்டம். இங்கு அண்மையில் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் தனக்கு வாக்களித்த தலித் இளைஞர்கள் மீது கொடூரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் அந்தத் தேர்தலில் தோற்றுப்போன ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வந்த் சிங் சிங்கானா. இவரும் இவரது கூட்டாளிகளும் அணில் குமார், மஞ்சித் குமார் என்ற இரண்டு இளைஞர்களைப் பிடித்து வந்தனர். அவர்களை தோப்புக்கரணம் போடச் செய்தனர். பின்னர் தரையில் துப்பி அதை அவர்கள் நாவால் சுத்தம் செய்யச் செய்தனர். இதனை வீடியோவாக எடுத்து பரவச் செய்துள்ளனர்.
இந்த வீடியோவின் அடிப்படையில் பல்வந்த் சிங் சிங்கானாவை கைது செய்துள்ளது போலீஸ். இதனை அவுரங்காபாத் மாவட்ட எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஸ்ரா உறுதிப்படுத்தினார். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கந்தேஷ் குமார் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி2னோம். அணில் குமார், மன்ஜித் குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வந்த் சிங் என்ற ஒருவரை கைது செய்துள்ளோம். பல்வந்த் சிங் மீது விரைவில் குற்றப்பதிரிகை தாக்கல் செய்யப்படும்" என்றார்.
ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட பல்வந்த் சிங், அந்த இருவரும் குடிபோதையில் தன்னுடன் தகராறு செய்ததாகவும். இதற்கு முன்னரும் பலமுறை இது போன்றே நடந்து கொண்டிருந்ததாகவும் கூறினார். அந்த இரு இளைஞர்களுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் அடங்கிய வீடியோ காண்போர் மனதை அதிர்ச்சியில் உறையவைப்பதாக உள்ளது. ஒவ்வொரு முறை தலித்துகளுக்கு எதிரான இவ்வாறான வன்முறைகளோ, பாலியல் பலாத்கார சம்பவங்களோ நடைபெறும் போதும் அது ஒரு சில நாட்களில் நீர்த்துப் போகிறது.
அமெரிக்காவில் கருப்பு இன இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது உலகமே நீதி கோரியது. கறுப்பின மக்களின் வாழ்க்கையும் முக்கியம் என்ற கோஷங்கள் உரக்க ஒலித்தது. ஆனால், இங்கே உள்ளூரிலே நம் கண் முன்னே நிகழும் கொடூரங்கள் நமக்கு பெரிதாகத் தெரிவதில்லை. ஒவ்வொரு முறைய இத்தகைய அநீதி நிகழும் போதும் தலித்துகளின் வாழ்க்கையும் முக்கியம் என்ற ஒருமித்த உணர்வு மேலோங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதியின் வன்மத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு அநீதிகளுக்கு குரல் கொடுத்து, அநியாயம் செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.அப்போதுதான் இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.