SSI Bhoominathan Muruder | ஆடு திருடும் தொழில்.. செல்போன் சிக்னல்.. திருச்சி போலீசார் கொலையின் விசாரணை பின்னணி!
ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
திருச்சியில் சிறப்பு எஸ் ஐ கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள் என்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒரு சிறுவனுக்கு 10 வயது என்பது மேலும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான 4 பேரும் தஞ்சாவூர் மாவட்டம் கல்லனையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
நேற்று அதிகாலை நடந்தது என்ன? கொலை நடந்தது எப்படி என்ற பல கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. இதற்கிடையே செல்போன் சிக்னலை வைத்தே முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாகவும் அதன் மூலமே கொலையாளிகளை போலீசார் நெருங்கியதாகவும் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கொலை நடந்துள்ளது. அதன்படி கொலை நடந்த நேரத்தை கணக்கிட்ட போலீசார் அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட பகுதியில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களின் விவரங்களை எடுத்துள்ளனர். அதன் மூலம் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை கொலை நடந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளது தனிப்படை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று முன் தினம் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார்.இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார்.
ஆனால் பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கடந்த கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே வந்துள்ளனர். அந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதைத் தாண்டி செல்ல வழியில்லாமல் அங்கு நின்று உள்ளனர்.
இதனையடுத்து அவர்களை பின்தொடர்ந்து வந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் ஆடு திருட்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்று உள்ளார்.அப்போது கொள்ளையர்கள் இருவரும் எஸ்எஸ்ஐ பூமியைநாதனை கடுமையாகத் தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் நள்ளிரவு இரண்டு மணிக்கு நடந்ததாகக் கருதப்படும் நிலையில் காலை 4 மணி அளவில் இதனை அப்பகுதி மக்கள் இதனை பார்த்துவிட்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கீரனூர் போலீசார் பூமிநாதன் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி டிஐஜி சரவண சுந்தர் எஸ்பி சுஜித்குமார் ஆகியோரும் எஸ் எஸ் ஐ பூமிநாதன் கொலைச் சம்பவம் குறித்தும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன், இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி அரசு ஆகியோர் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இரண்டு எஸ்ஐகள் உள்ளடங்கிய 8 தனிப்படை களையும் போலீசார் அமைத்து சிசிடிவி கேமரா உதவியோடு கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் 24 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கண்டிபிடித்துள்ளனர்.