திருச்சியில் ரூ.22 லட்சம் அமெரிக்க டாலர், 10 லட்சம் இந்திய ரூபாய் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.22 லட்சம் அமெரிக்க டாலர், 10 லட்சம் இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு பணம் கடத்தி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதனை தொடர்ந்து ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் இந்திய ரூபாய் மதிப்பில் 22 லட்சம் அமெரிக்க டாலர் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலிந்தோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகையதீன் என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் 10 லட்சம் இந்திய ரூபாயை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, முகையதீனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 32 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்