TN Crime: மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?
TN Crime: மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Crime: குற்றத்தை தட்டிக் கேட்டால் கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு சீர்கேடு?
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக சாடி வருகின்றன. ஆனால், அங்கு ஒன்று, இங்கு ஒன்றுமாக நடைபெறும் சம்பவங்களை எதிகட்சிகள் உள்நோக்கத்துடன் பெரிதுபடுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதேநேரம், தவறை தட்டிக் கேட்டதால் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தம்ழ்நாட்டில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் உட்பட இருவர் குத்திக் கொலை:
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், பொறியியல் கல்லூரி மாணவன் மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என கேட்டதற்காக, இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் கொலை
சட்டவிரோத குவாரி முறைகேடுகளை, ஊழல்களை எதிர்த்து போராடி வந்த புதுகோட்டையை சேர்ந்த ஜகபர் அலி கடந்த மாதம் 17ம் தேதி கொல்லப்பட்டார். சட்டவிரோத குவாரி ஊழல் முறைகேடுகளை எதிர்த்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் போராடி வந்த அவரை லாரி ஏற்றி கனிமவள கொள்ளை கும்பல் கொலை செய்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை வேடிக்கையா?
சாராய விற்பனை, கனிமவள கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடைமை. ஆனால், ஏனோ அவர்களின் கண்களில் படாத பல குற்றங்கள், பொதுமக்களின் கண்களில் பட்டுவிடுகிறது. அவர்களில் பொதுநலனில் அக்கறை கொண்ட ஒரு சிலர் கேள்வியும் கேட்கின்றனர். அப்படி, கேட்பவர்களையும் இந்த சமூக விரோதக் கும்பல்கள் எந்தவித அச்சமும் இன்றி, பொதுவெளியிலேயே பயங்கரமாக கொலை செய்வது என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முன்கூட்டியே பொதுமக்கள் அளித்த புகார்களின்பேரில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் 3 உயிர்கள் பறிபோவதை தடுத்திருக்க முடியும். ஆனால், நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
முதலமைச்சர் சொல்வது பொய்யா?
தமிழ்நாட்டில் அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக மட்டுமே குற்றச்செயல்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படி என்றால் மயிலாடுதுறை இரட்டைக் கொலை, சென்னையில் கடந்த மாதம் பாக்ஸர் வெட்டிக் கொலை, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சஸ்பெண்ட், பெண் காவலர்களிடமே செயின் பறிப்பு, பெண் ஏடிஜிபி மீது கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன? என்பதை ஸ்டாலின் கவனிக்க தவறிவிட்டாரா? என கேள்வி எழுகிறது. அல்லது அனைத்தும் தெரிந்திருந்தும் பொய் சொல்கிறாரா? எனவும் கேட்க தோன்றுகிறது. இந்த சாராய மற்றும் கனிமவள கொள்ளை மாஃபியா என்று கட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















