விடுதி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! முதியவருக்கு 35 ஆண்டு சிறை...திருப்பத்தூரில் அதிர்ச்சி
திருப்பத்தூர் அருகே 6 மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு.

மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 35 ஆண்டு சிறை
திருப்பத்தூர் அருகே 6 மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வேலுார், விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் வெங்கடேசன், 69. இவரது மனைவி கோடீஸ்வரி,60. இவர் திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் சமையலராக வேலை செய்து வந்தார். அதனால், விடுதிக்கு எதிரில் வீடு வாடகைக்கு எடுத்து, வெங்கடேசனும், லோகேஸ்வரியும் வசித்து வந்தனர்.
வெங்கடேசன், விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவியை, கடந்த, 2018, செப்டம்பர் 13ம் தேதி விடுதியின் எதிரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். அதே போன்று, 2018 ஆண்டு டிசம்பர் 17ல், அதே விடுதியில் உள்ள 5 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
வெங்கடேசனுக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை
இது குறித்து, மாணவியர் தெரிவித்த புகாரின்படி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா குமாரி, முதியவர் வெங்கடேசனுக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த படகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி தமிழரசன், 29, இவர், கடந்த, 2018 மே, 3ல், அப்பகுதியில் வீட்டில் 17 தனியாக இருந்த, மனநலம் பாதித்த, வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து போக்சோவில் தமிழரசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை, தமிழரசனுக்கு, 9 ஆண்டு சிறை, மற்றும், 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
போக்சோ சட்டம்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.
இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.





















