திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 19 மாணவர்கள் மயக்கம்
’’சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவு’’
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு யூனியன் பகுதியில் உள்ள கருங்காலி குப்பம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது மேலும் இதில் 130 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கியுள்ளனர்.
அப்போது மாணவர்கள் சத்துணவை சாப்பிட்டு உள்ளனர். அதில் புருஷோத்ராஜ் என்ற மாணவன் வாங்கிய சத்துணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே சத்துணவு வழங்கும் ஊழியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மேரிகிரிஸ் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளான். உடனே மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது நிறுத்துப்பட்டது. மேலும் சத்துணவு வழங்கியதில் ஒரு சில மாணவர்கள் சத்துணவை சாப்பிட்டு உள்ளனர். இதில் மாணவ மாணவியருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
மதியம் வழங்கிய சத்துணவில் பல்லி விழுந்த சாப்பாடு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் புருசோத்தமன், ஸ்ரீமதி, ஞானவேல் உட்பட 19 மாணவர்களை உடனடியாக மினி லோடு லாரியில் ஏற்றி கொண்டு ஆசிரியர்கள் வடமாதிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையின் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன், மருத்துவர் முகமது குழுவினர் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். சில மணிநேரம் சிகிச்சைக்கு பிறகு மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மருத்துவமனையில் இருந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் முத்தழகன் பள்ளி துணை ஆய்வாளர் சைனிமோல், உதவி திட்ட அலுவலர் ஆறுமுகம், திட்ட அலுவலர் அறிவாழி உள்ளிட்டோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து கருங்காலி குப்பம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்ற கல்வி அலுவலர்கள் பள்ளியினை ஆய்வு செய்தனர். இதனையடுத்து பள்ளி விழுந்த உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் எந்த விதமான பாதிப்பு இல்லாமல் உள்ளார்கள் என மருத்துவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் சாப்பிடும் மதிய சத்துணவு தயாரிப்பில் கவன குறைவாக தயாரித்தால் சமயலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை 66 லட்சத்தில் இருந்து 71 லட்சமாக உயர்வு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி