Crime : மகனை மருத்துவராக்க ஆசைப்பட்ட தந்தை..! 63 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மோசடி.. அதிர்ச்சி தகவல்கள்.
மருத்துவ கல்லூரியிடம் சீட் வாங்கித் தருவதாக கூறி சென்னையைச் சேர்ந்த நபரிடம் ரூபாய் 63 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போரூர் அருகே அமைந்துள்ளது அய்யப்பன்தாங்கல். இங்குள்ள சின்ன கொளுத்துவாஞ்சேரி அண்ணாநகர் முதல் தெருவில் வசித்து வருபவர் கதிரவன். இவருக்கு வயது 49. தேனியை பூர்வீகமாகக் கொண்டவர். கதிரவனுக்கு தனது மகனை மருத்துவப் படிப்பில் படிக்க வைக்க விருப்பம். கதிரவன் வெளிநாட்டில் மெக்கானிக்காக பணியாற்றி தற்போது சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற தனது தம்பியிடம் கூறியுள்ளார். அப்போது, அவர் தனக்கு தெரிந்த ஒரு நபர் மூலமாக மருத்துவ கல்லூரியில் எளிதில் மருத்துவ சீட்டு பெற முடியும் என்று கூறியுள்ளார். மேலும், இதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமையாகவுண்டன்பட்டியில் வசித்து வரும் முருகன் ( வயது 63) என்பவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள பல்கலைகழகத்தில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கதிரவனிடம் முருகன் உறுதியளித்துள்ளார். இதற்காக பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, மகனை மருத்துவராக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கதிரவன் முருகனின் வங்கிக்கணக்கிலும், நேரடியாகவும் ரூபாய் 63 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அளித்துள்ளார்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் கதிரவனின் மகனுக்கு முருகன் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, முருகனிடம் கதிரவன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், முருகன் முறையான பதிலளிக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மகனை மருத்துவராக்க முடியவில்லை என்ற மன உளைச்சலிலும், பணத்தையும் திரும்ப பெற முடியாத காரணத்தாலும் கதிரவன் வேதனை அடைந்துள்ளார்.
இதையடுத்து, கதிரவன் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மகனை மருத்துவராக்க ஆசைப்பட்ட நபரிடம் இருந்து ரூபாய் 63 லட்சத்தை 63 வயது நபர் மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட முருகனிடம் இருந்து பணம் மீட்கப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க : சென்னையில் ஓடும் ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி திருட்டு முயற்சி.. திடீரென நடந்த விபரீதம்..
மேலும் படிக்க : Crime : அதிர்ந்த மக்கள்.. 600 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி பறிமுதல்.. திண்டிவனத்தில் டீலர் கைது