இடப்பிரச்சினையில் விவசாயி அடித்து கொலை: தஞ்சாவூர் அருகே பரபரப்பு
கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவ்விரு நிலங்களுக்கு இடையே நில அளவை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மேலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இடப்பிரச்சனையில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நேற்று வியாழக்கிழமை இடப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஒரத்தநாடு வட்டம் சில்லத்தூர் பகுதி சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ராஜேந்திரன் (65) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினரான ஆர்.ரவிச்சந்திரன் (45) என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இடப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருதரப்பினரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவ்விரு நிலங்களுக்கு இடையே நில அளவை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மேலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு எட்டு மணி அளவில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரான மதியழகன் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனிடம் இடப் பிரச்சினை தொடர்பாக கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது
தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினர் மத்தியிலும் தள்ளுமுள்ளு நடந்துள்ளது. இதில் ரவிச்சந்திரன் மற்றும் மதியழகன் இருவரும் சேர்ந்து கட்டையால் சரமாரியாக தாக்கியதில் ராஜேந்திரன் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜேந்திரனை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ராஜேந்திரனே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜேந்திரனை அடித்து கொன்ற அவரது உறவினர் ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்திக்குத்து வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). இவர் கோவில் பூசாரி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (58) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தநிலையில், கடந்த 28.07.2019 அன்று பெருமாள் வீட்டின் வழியாக ராஜேந்திரன் சென்று கொண்டிருந்தபோது அவரை பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்க முயற்சி செய்தார். அப்போது உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராஜேந்திரன் கட்டையை பிடுங்கி தூர வீசிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் தான் மறைத்து வைத்து எடுத்துவந்த கத்தியை கொண்டு ராஜேந்திரனின் வயிற்றில் குத்தியுள்ளார்.
மேலும் இதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் மகன் தினேஷ் (24) வயிற்றிலும் பெருமாள் கத்தியால் குத்தியுள்ளார். இதில் தினேஷ் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, தகாத வார்த்தையால் திட்டியதற்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 250/- ரூபாய் அபராதமும், இருவரையும் கத்தியால் குத்தியதற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெருமாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





















