Sivashankar Baba: சிவசங்கர் பாபா ‛எஸ்கேப்’ ; சிபிசிஐடி நெருங்கிய நிலையில் தப்பியோட்டம்!
தப்பியோடிய சிவசங்கர் பாபா, ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்படுபவர் சிவசங்கர். இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
ஜாமினில் வந்து புகாரளித்த சிறுமியை 3வது முறை பாலியல் வன்கொடுமை செய்த நபர்
இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசமும் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணையை நடத்த சிபிசிஐடி தனிப்படை நேற்று டேராடூன் விரைந்தனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஐடி தனிப்படை அவரை தேடி மருத்துவமனை சென்றபோது, அவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், சிவசங்கர் பாபா அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் வரமாட்டார்கள் என்று நினைத்து, சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகிகள் பொய் கூறினார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உண்மையில் சிவசங்கர் பாபா டேராடூனில் தான் இருக்கிறாரா என்ற கோணத்திலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும், சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க உத்தரகாண்ட், டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
முன்னதாக, சிவசங்கர் பாபா வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்கு ஏதுவாக சி.பி.சி.ஐ.டி. அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்