கொலைக்கு காரணமான புது ஸ்கூட்டர்.! தம்பியைக் கொலை செய்த அண்ணன்: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற புலிப்பாண்டி. புலிப்பாண்டிக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள். இவர்களில் மூத்த மகன் முனியசாமிக்கு 51 வயதாகிறது. அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
புலிப்பாண்டியின் 2வது மகன் செல்லத்துரை (50). இவர் திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். 3வது மகன் முருகன் (45) திருமணம் முடித்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
புலிப்பாண்டியின் மகள்கள் கற்பகம் (40), பாக்கியலட்சுமி (38) ஆகியோர் திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மூத்த மகனான முனுசாமிக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் சொத்துகளை மற்ற இரண்டு மகன்களுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார் புலிப்பாண்டி.
இதன் காரணமாக குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி புலிப்பாண்டியின் கடைசி மகன் முருகன் தான் புதிதாக வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தனது தந்தையிடம் காண்பிக்க தெற்கு பொம்மையாபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.
ஸ்கூட்டரை தந்தை மற்றும் சகோதரனிடம் காண்பித்து விட்டு இரவு நேரமாகி விட்டதால் தனது தந்தையின் வீட்டில் தனது மூத்த சகோதரர் முனியசாமியுடனேயே தங்கியுள்ளார். அவரது தந்தை மற்றொரு அறையில் தூங்கியுள்ளனார்.
இந்நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த தனது தம்பி முருகனை, முனியசாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டிப் படுகொலை செய்தார்.
கொலை செய்துவிட்டு குளித்து நல்ல உடை உடுத்திக் கொண்டு, பசுவந்தனை காவல் நிலையத்திற்குச் சென்று முனியசாமி சரண் அடைந்து, தனது தம்பியை வெட்டி கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், மணியாச்சி டிஎஸ்பி. சங்கருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முனியசாமியை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் தனக்கு தந்தை சொத்து தராமல் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்தார். தம்பி முருகன் ஸ்கூட்டர் வாங்கி வந்து தந்தையிடம் காண்பித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனக்கு எதுவும் தராமல் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தது தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
தம்பி முருகனிடம் கேட்டபோதும், உனக்கு தான் குடும்பம் எதுவும் இல்லை உனக்கு சொத்து எல்லாம் எதுக்கு என்று கூறியதால் ஆத்திரத்தில் இருந்தேன். நேற்று முருகன் தனியாக இருந்ததால் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக முனியசாமி கூறினார்.
மேலும் தனது தம்பியை கொலை செய்து விட்டு, குளித்து விட்டு ஹாயாக சென்று முனியசாமி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதற்கிடையில் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள முனியசாமியிடம் விசாரணை நடத்தினார்.