விழுப்புரத்தில் கடன் சுமையால் தண்டவாளத்தில் தலை வைத்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை
’’தற்கொலை செய்து கொண்ட பிரகாஷுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன்ராஜா (15), பிரவீன்ராஜா (12) என்ற 2 மகன்களும் உள்ளனர்’’
விழுப்புரம் மருதூர் மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பிரகாஷ் (40), ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தற்போது கொரோனா கால கட்டத்தில் போதிய வருமானமின்றி தவித்து வந்ததால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனை சமாளிக்க பிரகாஷ், வெளியில் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஷேர் ஆட்டோ தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். ஒருகட்டத்தில் குடும்ப வறுமை, கடன் சுமை ஆகிய பிரச்சினைகளால் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் விழுப்புரம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்து விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் செல்வதற்காக என்ஜின் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் என்ஜின் அருகில் சென்ற அவர் திடீரென ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதை சற்றும் எதிர்பாராத ரெயில் என்ஜின் டிரைவர், என்ஜினை சாதுர்யமாக இயக்கி நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பிரகாசின் உடல் மீது என்ஜின் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே காவல் உதவி ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பிரகாஷுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன்ராஜா (15), பிரவீன்ராஜா (12) என்ற 2 மகன்களும் உள்ளனர். குடும்ப வறுமை, கடன் சுமை காரணமாக ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?
Alanganallur Jallikattu : விடாமல் போராடிய இளைஞர்.. தூக்கியெறிந்த காளை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்