சட்ட விரோதமாக வைத்திருந்த 6 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் வனவிலங்குகளை சமூக விரோதிகள் சிலர் நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த 6 நாட்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை சமூக விரோதிகள் சிலர் நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் எல்லையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான காப்பு காடுகளில் அரிய வகை வனஉயிரினங்களான மான்கள், காட்டுப்பண்றிகள், முயல்கள் மற்றும் தேசிய பறவையான மயில்கள் என உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன இவைகளை சமூக விரோதிகள் வேட்டையாட சிலர் நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவுப்படி டிஎஸ்பி விஜயராஜ் மற்றும் டிஎஸ்பி ராஜா தலைமையிலான 2 ஆய்வாளர்கள் கொண்ட போலீசார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மீது சோதனை நடத்த உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் கல்வராயன்மலை இருக்கக்கூடிய தாழ்மருதூர் கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளும் அதே போல கெண்டிக்கல் கிராமத்தில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் என மொத்தம் ஆறு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தால் குற்றம் எனவும் இது குறித்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையிலும் வீட்டில் நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய எதிரிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் . மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அனுமதி இன்றியும் சட்டத்திற்குப் புறம்பாகவும் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் மலைவாழ் மக்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் எனவும் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.
மேலும் கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் பெரும்பாலானோர் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்துள்ளதாகவும், ஏதாவது மோதல் பிரச்னை ஏற்பட்டால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களும் தடையின்றி இங்கு அரங்கேறி வருகின்றன. எனவே காவல் துறையினர், இதேபோல அனைத்து கிராமங்களிலும் சோதனை நடத்தி அனுமதியில்லாத துப்பாக்கிகளை பறிமுதல் செய்வதுடன், சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கல்வராயன்மலையில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.