கிருஷ்ணகிரி அருகே 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்; 20 பேர் கைது!
எச்சரித்தும் ஒப்படைக்காததால் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், நாட்டு துப்பாக்கிகளுடன் கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் உள்கோட்டைவிற்கு உள்பட தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி மற்றும் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது, வன விலங்களை வேட்டையாடுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரசின் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை கள்ளத்தனமாக வைத்திருப்போர் காவல் நிலையங்களில் ஒப்படைக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளதனமாக நாட்டுத்துப்பாக்கிகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக வந்த இரகசிய தகவலின் பேரில் போலீசார் கடந்த மூன்று நாட்களாக கிராமப்பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தேன்கனிக்கோட்டை அடுத்த மேலூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ண, தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாராயனப்பா, தளி அருகே உனிசினத்தம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ், காவேரி புரம் வெங்கடராஜ், இம்ரான், உத்தனப்பள்ளி அருகே பெரிய நாகத்தோனை சேர்ந்த அருண்குமார் என்கின்ற ஸ்ரீராம், காட்டூரை சேர்ந்த சின்னசாமி, கோபி, ஆண்டியப்பன், முனியப்பன், கோவிந்தன், பாவடப்பட்டியை சேர்ந்த சின்னராஜ் உள்பட 20 பேர் கைது செய்து அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி கேட்டரிந்த போது
தேன்கனிக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம் , உத்தனப்பள்ளி, தளி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நாட்டு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டன.இச்சோதனையில் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த20 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 29 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்போர், தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது 102 சி ,ஆர்பிசி சட்டத்தின் கீழ் குறைந்த பட்ச நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வேண்டுகோளை மீறும்பட்சத்தில், நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை போலீசார் கண்டுபிடித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இது மட்டுமின்றி மேலும், சிசிடிவி கேமராக்கள் சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க உதவியாக இருக்கிறது. அதேபோல குற்றங்களுக்கு சாட்சியாகவும் இருக்கிறது. எனவே நகர்ப்புறங்கள் கிராமப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். விரைவில் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
துப்பாக்கி கலாசாரம் பேரழிவை ஏற்படுத்தும். ஆனால் அனுமதியின்றி இத்தனை பேர் துப்பாக்கி பயன்படுத்தி வருவதும், இன்னும் எத்தனை பேர் துப்பாக்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்பது புதிராக இருப்பதும், பாதுகாப்பு குறித்த ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.