Exclusive: “வீண்பழி... தகாத வார்த்தை... மரண சித்ரவதை..” - உயிரிழந்த சேலம் மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர் பேட்டி
100% மாற்றுத்திறனாளியான தனது கணவர் எப்படி திருடி இருக்கும் முடியும் என்று கூட சிறிதும் யோசிக்காமல் சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெய்பீம் பட பாணியில் சேலத்தில் லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு திருட்டு வழக்கில் தொடர்புள்ளதாக கூறி, பிரபாகரன் மற்றும் அவரது மனைவி அம்சலா இருவரையும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினர் கடந்த 8 ஆம் தேதி மதியம் கருப்பூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று நாள் போலீஸ் காவலுக்கு பிறகு, 11 ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கைது செய்து பிரபாகரனை நாமக்கல் மாவட்ட கிளை சிறையிலும், அவரது மனைவி அம்சலா சேலம் மகளிர் மத்திய சிறையிலும் அடைத்தனர். 12 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பிரபாகரன் நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அம்சலா 12 ஆம் தேதி காவல் துறையினரால் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்த வெளியேற்றப்படுகிறார். அன்றைய தினம் இரவே பிரபாகரன் உயிரிழந்தார்.
பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 13-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரத் குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், பிரபாகரனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர், கருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடைபெற்று முடிந்தது. பிரபாகரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதோடு, சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பிரபாகரனின் மனைவி அம்சலா ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார், அப்போது அவர் "8 தேதி திடீரென வீட்டிற்குள் புகுந்த காவலர்கள் தங்களை அடித்து எடுத்துச் சென்றதாகவும், 100% மாற்றுத்திறனாளியான தனது கணவரை மூன்று நாட்கள் நாமக்கல் காவலர் குடியிருப்பில் வைத்து பிளாஸ்டிக் பைகளால் தன்னையும் தனது கணவரையும் அடித்து தகாத வார்த்தையில் பேசி 125 சவரன் தங்க நகையை திருடியதாக ஒத்துக்கொள்ள வேண்டுமென துன்புறுத்தினர். மூன்று நாட்களுக்கு பின் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்னர் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பத்து ஆண்டுகள் வெளியே வரமுடியாமல் செய்து விடுவோம் என காவல்துறையினர் கூறினர். நீதிமன்றத்தில் எங்களை பேசவிடாமல் அனைத்திற்கும் காவல்துறையினர் பதிலளித்து எங்களை சிறையில் அடைத்தனர். 100% மாற்றுத்திறனாளியான எனது கணவர் எப்படி திருடி இருக்க முடியும் என்று கூட சிறிதும் யோசிக்காமல் சிறையில் அடைத்தனர். எனது கணவருக்கு நிகழ்ந்தது போல கொடுமை எந்த மாற்றுத்திறனாளிக்கும் நடக்கக்கூடாது, முதல்வர் அறிவித்துள்ள 10 லட்சம் எனது கணவருக்கு ஈடாக முடியுமா?” என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.