ராக்கெட் ராஜாவிற்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் - கோவை சிறையில் அடைப்பு
பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே ஜாதி ரீதியான மோதல் அரங்கேறி வருவதால் ராக்கெட் ராஜாவை இங்கு சிறை வைத்தால் பிரச்சனையாகிவிடும் என கருதி கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26). இவர் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று சாமிதுரையை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் இந்த கொலை ஏர்வாடி அருகே கோதைசேரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்றது தெரிய வந்தது. சாமிதுரை கொலை தொடர்பாக செல்வக்குமாரின் உறவினர் முருகேசன், திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் தச்ச நல்லுரை சேர்ந்த சஞ்ஜீவ்ராஜ், ஸ்ரீராம்குமார், ஆனந்த், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராஜசேகரன், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ், கோவில்பட்டியை சேர்ந்த ராஜ்பாபு, தூத்துக்குடி எட்டையபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் ஜேக்கப் ஆகிய 8 பேருடன் சேர்த்து 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பனக்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா உட்பட ஒரு சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ராக்கெட் ராஜாவை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதன் திடீர் திருப்பமாக நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவை இந்த கொலை வழக்கில் நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நெல்லை அழைத்து வரப்பட்டு நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராக்கெட் ராஜாவை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ராக்கெட் ராஜாவை பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வைத்து ராக்கெட் ராஜாவிடம் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் விசாரணை மேற்கொண்டார். குறிப்பாக பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே ஜாதி ரீதியான மோதல் அரங்கேறி வருவதால் ராக்கெட் ராஜாவை இங்கு சிறை வைத்தால் பிரச்சனையாகிவிடும் என கருதி கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கொலை வழக்கின் கைது செய்யப்பட்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.