‛நமக்கு ஒரு அடிமை சிக்கிச்சு...’ பல கெட்டப் போட்டு ராமநாதபுரம் இளைஞரை ஒரு வழியாக்கிய கோவை நபர் கைது!
கேட்கும்போதெல்லாம் பணம் தருகிறானே என்று எண்ணி ஒரு கட்டத்தில் கடிதத்தை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞரிடம் முகநூலில் நண்பராக பழகி பக்குவமாக பேசி நூதனமாக மிரட்டி பணம் பறித்த கோவையைச் சேர்ந்தவரை வரவழைத்து பொறி வைத்து பிடித்த, நுண் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தர பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் தினேஷ். 21 வயதாகும்
இவர் அங்குக் கூலி வேலை செய்து வருகிறார். தினேஷுடன் கோவை காமராஜர் நகரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாகவே பேஸ்புக் மூலம் பல ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஷ்டத்தில் இருப்பதாகக் கூறி தினேஷிடம் பணம் கேட்டுப் பெற்றுள்ளார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து, மீண்டும் அவர் தினேஷுடம் பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்த தினேஷ், ஏற்கனவே கொடுத்த பணத்தை அய்யப்பனிடம் கேட்டுள்ளார். இருப்பினும், பணம் கொடுக்க மறுத்த அய்யப்பன், உடனடியாக தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
இந்தச் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் முகுந்தன் என்பவர் தினேஷை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, "அய்யப்பன் கடன் வாங்கியவர்கள் பெயரை எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார்" என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக தினேஷின் பெயரை போலீசாரிடம் கூறாமல் இருக்கப் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு அச்சமடைந்த தினேஷ், பணத்தை அனுப்பியுள்ளார். அத்துடன் தொடர்ந்து தினேஷுடம் பணம் கேட்டு முகுந்தன் மிரட்டியுள்ளார். அப்போது தினேஷ் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சில நாட்கள் கழித்து தினேசுக்கு வேறொரு எண்ணில் இருந்து கால் வந்துள்ளது. அப்போது தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், முகுந்தன் மகள் சிகிச்சைக்குப் பணம் கேட்டுத் தராததால் அவரது குழந்தை இறந்துவிட்டதாகவும் இதனால் நஷ்ட ஈடு தரவேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நுண்குற்றப்பிரிவு போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தினேஷிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கோவை சேர்ந்த ஒரு நபரைப் பல பெயர்களை வைத்துக் கொண்டு தினேஷை மிரட்டியது தெரியவந்தது. அதையடுத்து, தினேஷ் அளித்த வாக்குமூலத்தின்படி வழக்குப் பதிவு செய்த ராமநாதபுரம் நுண் குற்றப்பிரிவு போலீஸார், அய்யப்பனை கைது செய்தனர்.
இது குறித்து போலீசாரிடம் நாம் விசாரித்ததில், ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை முத்தரையர் நகரை சேர்ந்தவர் முனியாண்டி என்பவரின் மகன் தினேஷ் (வயது20). 12-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தந்தை இறந்துவிட்டதால் விவசாய வேலை செய்து தாய் மற்றும் அக்காள் ஆகியோரை கவனித்து வருகிறார்.இவரது முகநூலில் கடந்த 2020-ம் ஆண்டு அய்யப்பன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவரிடம் முகநூலில் சாட்டிங்கில் ஈடுபட்டு நட்பாக பேசி வந்த நிலையில் செல்போனில் அழைத்து பேசி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பேசிய அய்யப்பன் தனக்கு அவசரமாக ரூ.7ஆயிரம் கடன் வேண்டும் என்று கேட்டதால் இரக்கப்பட்டு தினேஷ் அந்த தொகையை வழங்கி உள்ளார். இந்த தொகையை திரும்ப கேட்டபோது பதில் வராதநிலையில் 2 மாதம் கழித்து பேசிய நபர் அய்யப் பனின் நண்பர் முகுந்தன் பேசுவதாக கூறி அறிமுகமாகி அய்யப்பன் இறந்துவிட்டதாகவும் உன்னிடம் ரூ.7 ஆயிரம் கடன் வாங்கியதையும், அதனை கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் உடைந்து தனது சாவுக்கு தினேஷ்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த கடிதம் தற்போது தன்னிடம் உள்ளதாகவும் கூறி உள்ளார்.
இதனை கேட்டு தினேஷ் அதிர்ச்சியடைந்து பதறி துடித்ததை கவனித்த நபர் கடிதம் வெளியில் தெரியாமல் இருப்பதற்கு ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டதால் தப்பித்தால் போதும் என்று பணத்தை அனுப்பி உள்ளார். இந்த நிலையில் மேலும் ரூ.20ஆயிரம் கேட்டு வாங்கி உள்ளார்.
கேட்கும்போதெல்லாம் பணம் தருகிறானே என்று எண்ணி ஒரு கட்டத்தில் கடிதத்தை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் வேறுவழியின்றி பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
இதன்பின்னரும் ரூ.50 ஆயிரம் கேட்டபோது தினேஷ் இல்லை என்று கூறியதால் இனி சத்தியமாக கேட்கமாட்டேன் இதுதான் கடைசி என்று கூறி ராமநாதபுரம் பஸ்-ஸ்டாண்ட் பகுதிக்கு வந்து ரூ.50 ஆயிரம் பணத்தினை பெற்றுச் சென்றுள்ளார்.
இதோடு நிறுத்திவிடாமல் மேலும் ரூ.15 ஆயிரம் கேட்டபோது தர மறுத்ததால் தனது குழந்தை இறந்துவிட்டதாகவும் அதற்கு நீதான் காரணம் என்று போலீசில் புகார் செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். ஆனால், தினேஷ் தர மறுத்ததால் கோவை நகர் காவல்நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாகவும் உன்மீது புகார் வந்துள்ளது எனக் கூறி மர்மநபர் ரூ.15 ஆயிரம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இனிமேலும் கொடுப்பதற்கு யாரிடம் பணம் வாங்குவது என்று தெரியாமல் மனம் உடைந்த தினேஷ் இறுதியாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மருத்துவமனையில் வைத்து இளைஞரிடம் போலீசார் விசாரித்தபோது இந்த தகவல் வெளியானது. இதுகுறித்து தினேஷ் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் கோவை குறிச்சி காமராஜர்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் அய்யப்பன் (34) என்பவர்தான் அய்யப்பன், முகுந்தன், அவரின் நண்பர், கோவை சப்-இன்ஸ்பெக்டர் போன்ற கேரக்டர்களில் பேசி நாடகம் நடித்து இந்த மோசடி செயலில் ஈடுபட்டது தெரிந்தது.
6-வது படித்துவிட்டு கம்பி கட்டும் கட்டிட தொழிலாளியான இவர்தான் பல்வேறு பெயர்களில் பேசி மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததும் இதுவரை ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் வாங்கி உள்ளதும் அதனை வைத்து செல்போன், மோட்டார் சைக்கிள், விதவிதமான ஆடைகள் வாங்கி உல்லாசமாக இருந்து வந்தது தெரிய வந்தது.
அய்யப்பனை நேரில் பார்க்காததாலும், குரலை மாற்றி பேசி வந்ததாலும் ராமநாதபுரத்திற்கு முகுந்தன் கேரக்டரில் வந்த அய்யப்பனை தினேசிற்கு அடையாளம் தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து போலீசார் தினேஷ் மூலம் பணம் கொடுப்பதாக கூறி அய்யப்பனை ராமநாதபுரம் வரவழைத்து சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது, தெரிந்த நபராக இருந்தாலும் அவர்தானா என்பதை உறுதி செய்துவிட்டுதான் எந்த உரையாடலும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.