Crime: பழிக்கு பழியாக வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெட்டி கொலை - புதுச்சேரியில் பயங்கரம்
புதுச்சேரியில் வெடிகுண்டுகள் வீசி அரிவாளால் வெட்டி ரவுடி கொலையான சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்கு பழியாக இக்கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் வெடிகுண்டுகள் வீசி அரிவாளால் வெட்டி ரவுடி கொலையான சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (24). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களான சக்தி (20), தினேஷ்குமார் (21) ஆகியோருடன் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களில் அங்கு ஒரு கும்பல் வந்து இறங்கியது. மிகவும் குறுகிய பகுதியில் இருந்த பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர்களை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதன்பின் வெட்டுக்காயங்களுடன் கிடந்த பன்னீர்செல்வம், சக்தி, தினேஷ்குமார் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பன்னீர்செல்வம் இறந்து போனார். அவரது நண்பர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ரவுடி பன்னீர்செல்வம் கொலையான தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மூலக்குளம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஜாண்டி என்ற செந்தில்நாதன் (26) கும்பலுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் யார் பெரியவர்? என்பது குறித்து முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
இதுமட்டுமின்றி ஜாண்டியின் ஆதரவாளரான சண்முகாபுரம் ராம் நகரை சேர்ந்த ஜெயபால் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதால் பன்னீர்செல்வத்தை தீர்த்துக்கட்ட ஜாண்டி முடிவு செய்தார். இதுதொடர்பாக அடிக்கடி மோதிக்கொண்ட நிலையில், சமீபத்தில் ஜாண்டி கோஷ்டியை சேர்ந்த வைஷாக் என்பவரை பன்னீர்செல்வம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்குப்பழியாக பன்னீர்செல்வத்தை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதை நிறைவேற்ற அவரது அன்றாட நடவடிக்கைகளை ஜாண்டி கோஷ்டியினர் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்து ஜாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி பன்னீர்செல்வத்தை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியது அம்பலமானது. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ஜாண்டி என்ற செந்தில்நாதன், தீவனூரை சேர்ந்த பரத் (25), கிளியனூரை சேர்ந்த அஜித் (30), பாரதிபுரத்தை சேர்ந்த கனகராஜ் (24), பூத்துறையை சேர்ந்த மற்றொரு பரத் (24), காமராஜ் நகரை சேர்ந்த விமல்ராஜ் (25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த வைசாக் (26) ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்