எப்படி திறமையாக சம்பாதிக்கலாம்? - ரூ.1.57 கோடி இழந்த மேலாளர்! எச்சரிக்கை மக்களே
புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த, தனியார் நிறுவன மேலாளர் ரூ. 1.57 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த, தனியார் நிறுவன மேலாளர் ரூ. 1.57 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார், சைபர்கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி ஆன்லைன் டிரேடிங்கில் மோசடி
புதுச்சேரி, உருளையன்பேட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 54; திருபுவனை உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியபோது, டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம், அதிக லாபத்தை தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து கொள்ளும்படி விளம்பரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பிய, அவர் மர்ம நபர் தெரிவித்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவித்து விட்டதாக நினைத்து தனியார் நிறுவன மேலாளர், மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக ஒரு கோடியே 57 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு 83 கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 584 ரூபாய் லாபம் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் கணக்கில் காட்டியுள்ளது.
இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த பெண் 96 ஆயிரத்து 800, ஆண் நபர் 22 ஆயிரம், நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர் 39 ஆயிரம், நல்லவாடு சேர்ந்த நபர் 60 ஆயிரத்து 900, பாகூரைச் சேர்ந்தவர் 32 ஆயிரம், சண்முகப்புரத்தை சேர்ந்த பெண் 28 ஆயிரம் என மொத்தம் 7 பேர் மோசடி கும்பலிடம் ஒரு கோடியே 60 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















