இறைச்சியில் விஷம் வைத்து தெரு நாய்கள் கொலை: நடமாடவிடாததால் வெறிச் செயல்!
அடுத்தடுத்து 7 நாய்களும் வாந்தி எடுத்து மூச்சு திணறி உயிரிழந்தன.
புதுச்சேரி சுதந்திர பொன் விழா நகர்ப் பகுதியில் உள்ள 7 தெரு நாய்களை இறைச்சி மூலம் விஷம் வைத்து கொலை செய்தோரை போலீஸார் தேடி வருகின்றனர். வாயில்லா ஜீவன்களைக் கொன்றவர்களைக் கடுமையாக தண்டிக்க பொது மக்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புதுச்சேரி காமராஜர் நகர்ப் பகுதியில் உள்ளது சுதந்திர பொன் விழா நகர். அப்பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் தனியாக அமைந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இக்குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 15 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்தன. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்து கொண்டும் இருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்த போதும் 7 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அப்பகுதி மக்கள் இது குறித்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் அருகில் வசிக்கும் சிலர் நாய்களைக் கொல்லும் நோக்கிலேயே கோழி கறி மூலம் செடிகளுக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகளை கொண்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் வெளியாட்களை, அங்குள்ள நாய்கள் விடாததாலும், அப்பகுதியில் குற்றச் சம்பவங்ளை தடுக்கும் வகையிலும் நாய்கள் இருந்துள்ளதால் கல் மனம் கொண்ட சிலர் இதனை செய்திருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
கால் நடைத்துறை அதிகாரிகள் உடல் கூறு பரிசோதனை செய்து சென்றுள்ளனர். 15 நாட்கள் கழித்து தான் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொடூர மனம் படைத்த சிலரால் வாயில்லா விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்