சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!
இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே, காலை வாக்குவாதம் ஏற்பட்டு கைகளைப்பாக மாறியது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
கரூரில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள செம்படாபாளையம், கணபதி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக 11 சென்ட் நிலம் இருந்துள்ளது. இவருக்கு செல்வம் மற்றும் பாப்பாத்தி மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில் 5 1/2 சென்ட் நிலத்தை பாப்பாத்தியின் பெயருக்கு அவரது அப்பா இறப்பதற்கு முன்பு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மீதம் உள்ள நிலத்தை அனைவரும் பயன்படுத்தி வந்த நிலையில், பாப்பாத்தியின், அண்ணன் செல்வம் அவரின் குடும்பத்தினர், பாப்பாத்தி நிலம் மற்றும் மீதமுள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் கிரயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடும்ப பிரச்னை சம்பந்தமாக அண்ணன், தங்கை இருவருக்குள் தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பாப்பாத்தி (50). அவரது மகள் நந்தினி (30) மற்றும் அண்ணன் செல்வம் (55) மற்றும் அவரது மனைவி தவமணி (52), மகன் யுவான் சங்கர். இவர்கள் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே, காலை வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை அருகே இடி தாக்கியதில் பள்ளி மாணவன் உட்பட மூன்று பேருக்கு காயம்.
குளித்தலை அருகே இடி தாக்கி விநாயகர் கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகள் இடிந்து விழுந்தது. கோவிலின் வராண்டாவில் படுத்திருந்த பள்ளி மாணவன் உட்பட மூன்று பேருக்கு லேசான காயம். கோவில் அருகே இருந்த அரச மரத்தில் இருந்த காக்கா, குருவி 30க்கும் மேற்பட்டவை இறப்பு.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட புனவாசிப்பட்டி அருகே வீரணம்பட்டியில் ஊரின் நடுப்பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி அளவில் விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்துள்ளது. அதில் கோபுரத்தில் இருந்த விநாயகர், நந்தி சிலைகள் இடிந்து விழுந்தது. மேலும் கோவில் வராண்டாவில் படுத்து இருந்த பள்ளி மாணவன் பிரசாத், கல்லூரி மாணவன் கவி மற்றும் ஐயப்பன் உட்பட 3 பேர் மீது நெருப்புகள் பட்டு காயம் ஏற்பட்டது. கோவிலில் இருந்த அரச மரத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட காக்கா, குருவிகள் இடிதாக்கியதில் இறந்தது.