Villupuram: விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொலை மிரட்டலும் - டிரைவர் போக்சோவில் கைது
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை பகுதியை சேர்ந்த 26 வயதான பாண்டியன் வேன் டிரைவராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த மாணவியை பாண்டியன் மிரட்டி வந்துள்ளார்.
இதில் பயந்து போன அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை பின்தொடர்ந்த பாண்டியன் அருகே உள்ள மறைவான இடத்திற்கு மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு வைத்து மாணவியை பாண்டியன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து அந்த மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த மாணவி வீட்டில் இருந்த தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சிவகாமி தலைமையிலான போலீசார் பாண்டியனை பிடித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து போலீசார் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்