போலீசாரால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு : கெஞ்சும் மனிதர்கள், பதறவைக்கும் வீடியோ..! என்ன நடந்தது?
சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தாக்கும் வீடியோ காட்சிகளும், முருகேசனை தாக்க வேண்டாம் என உடனிருந்தவர்கள் கெஞ்சும் காட்சிகளும்வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்புள்ள கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் இயங்கி வருவதால், பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபானங்களை வாங்கச் செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்படாததால், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மது பிரியர்கள் மது வாங்கச் செல்கின்றனர். மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம், ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் தாக்கப்பட்ட வெள்ளையன் (எ) முருகேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு pic.twitter.com/CQQ04z5M5q
— Don Updates (@Don_Updatez) June 23, 2021
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதி உள்ளது. அப்பகுதி வழியாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வர முடியும். இதனால் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்ததாகவும், மதுபாட்டில்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை நிறுத்தி காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் மீது காவல் துறையினர் லத்தியால் தாக்கியுள்ளனர். அப்போது இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) என்ற விவசாயக் கூலியை காவல் துறையினர் தள்ளிவிட்டதாகவும், அதில் கீழே விழுந்து பின்மண்டையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வாழைப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவச் சிகிச்சைக்காக முருகேசன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக முருகேசன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த முருகேசனுக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஜெயப்பிரியா, ஜெயபிருந்தா, ஜெயப்பிரியன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன. இதனிடையே சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தாக்கும் வீடியோ காட்சிகளும், முருகேசனை தாக்க வேண்டாம் என உடனிருந்தவர்கள் கெஞ்சும் காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவலர்கள் தாக்கியதால் தான் முருகேசன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள முருகேசனின் உறவினர்கள், தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தாக்கியதாகவும், முருகேசன் தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று மது அருந்தி விட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.