வேலை இல்லை.. இதுதான் தொழில்! கஞ்சா செடியை மரம்போல வளர்த்துவந்த இளைஞர்! போலீசார் அதிர்ச்சி!
வேலை இல்லாததால் கஞ்சா விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்பதால் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்ததாகவும், கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற போது சிக்கிக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை செய்து வந்த வட மாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அன்னூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவலர்கள் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவரது பெயர் ரபீன்ந்தர பரிடா என்பதும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கியிருந்து தனியார் ஆலையில் பணியாற்றி வருவதும், அவர் கடந்த சில மாதங்களாக தான் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு அருகே கஞ்சா விதைகளை தூவி கஞ்சா செடியை வளர்த்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரபீன்ந்தர பரிடாவை அழைத்துச் சென்ற காவல் துறையினர் சோதனை செய்த போது, சுமார் மூன்று மாதமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் ரபீன்ந்தர பரிடாவை அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் வேலை இல்லாததால் கஞ்சா விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்பதால் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்ததாகவும், கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற போது தான் சிக்கிக் கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ரபீன்ந்தர பரிடா மீது வழக்குப் பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்