Crime: 'சத்தமா பட்டாசு வெடிப்பியா?' இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - சகோதரர்கள் வெறிச்செயல்
மகாராஷ்ட்ராவில் தீபாவளிக்கு வெடித்த பட்டாசு சத்தமாக இருந்ததாக கூறி வாலிபரை சகோதரர்கள் தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகை வட இந்தியாவில் 5 நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகளை தவிர்க்கவே முடியாது. இந்த சூழலில், பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறு இளைஞரின் உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பட்டாசு வெடித்ததில் தகராறு:
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது கோவந்தி. இந்த பகுதியில் வசித்து வருபவர்கள் நிலேஷ் மற்றும் நிகில். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலேஷ் மீது கோபர் கைரேனே காவல்நிலையத்தில் உள்ளது. இவர் மீதுள்ள வழக்கு ஒன்றில் தற்போது பிணை வழங்கப்பட்டு இவர் வெளியில் உள்ளார்.
இந்த நிலையில், தீபாவளி அன்று இரவில் கணேஷ் சிதல்வாத் என்ற 22 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடியுள்ளார். இரவு நேரம் என்பதால் பட்டாசுகளை வெடித்து கணேஷ் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். அப்போது, அவர் பட்டாசுகளை வெடித்த இடத்தில் சகோதரர்களான நிலேஷ் மற்றும் நிகில் அமர்ந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தது மிகவும் சத்தமாக இருந்ததால் நிலேஷ் மற்றும் நிகில் இருவரும் கணேஷிடம் கத்தினார்கள்.
வாலிபருக்கு கத்திக்குத்து:
அப்போது, கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நிகில் மற்றும் நிகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த சகோதரர்களான நிகில் மற்றும் நிகேஷ் கணேஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, நிலேஷ் தனது சகோதரர் நிகிலிடம் கையில் கத்தியை கொடுத்துள்ளார். அப்போது, கத்தியை வாங்கிய நிகில் ஆத்திரத்தில் கணேஷை நெஞ்சு, கழுத்து பகுதியில் மாறி, மாறி குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேஷை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கணேஷை கத்தியால் குத்திய நிகில் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். கணேஷின் நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தப்பியோடிய நிகிலின் சகோதரர் நிகேஷ் அவரது வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய நிகிலையும் போலீசார் கைது செய்தனர்.
சகோதரர்களான நிகேஷ் மற்றும் நிகில் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு ஆளான கணேஷ் கோவந்தியில் உள்ள ஷதாப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: வீலிங் சாகசம் செய்து இன்ஸ்டாவில் பதிவு...நெல்லை, தென்காசியில் இளைஞர்கள் கைது
மேலும் படிக்க: Sabari Mala Special Bus: பக்தர்களே! சபரிமலைக்கு நாளை மறுநாள் முதல் சிறப்பு பேருந்துகள் - எப்போது வரை?