Crime: மது போதைக்கு அடிமை..... திருமண நாளில் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்..!
மயிலாடுதுறையில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் 49 வயதான அருள் என்கிற ராயப்பன், 45 வயதான ரேவதி தம்பதியினர். இவர்கள் இருவரும் 25 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். பேருந்து நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடும்பத்திற்கு உதவாத கணவன் ராயப்பனை நம்பாமல் அவரது மனைவி ரேவதி, வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். மகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள் பெரம்பலூரில் கல்லூரி படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் ரேவதி கடந்த 1 ஆண்டுகாலமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரம் பகுதியில் வசிக்கும் தாய் மல்லிகா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ரேவதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த ராயப்பன் அழைத்துள்ளார். அப்போது அவர் அழைப்பை ஏற்க மறுத்த ரேவதி தன்னுடைய உடமைகளை தரும்படி கேட்டுள்ளார்.
Dvac Raid : கோவையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ; முழு விபரம் இதோ
உடமைகளை தருவதாககூறி அழைத்து சென்றபோது ராயப்பன் வீட்டிற்கு அருகே காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் ராயப்பனை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமண நாளில் காதல் திருமணம் செய்த கணவர் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல தாய்மார்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். முந்தைய அரசும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சரி மதுபான கடைகளை மூடாமல், இது போன்று பல குடும்பங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது. இது போன்ற நிகழ்வுகளை அரசு கவனத்தில் எடுத்து மதுபான கடைகளை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.
T20 World Cup Squad: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம்பெறாததற்கு இது தான் காரணமா?