கள்ளச்சாராய கும்பலை விரட்டி ஆடு மேய்ப்பவரை பிடித்த போலீஸ்: தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி!
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்பவர்களை பிடிக்க சென்ற காவலர், ஆடுமேய்க்க சென்றவரை பிடித்து தாக்கியதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராய விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக தொடர் புகார்கள் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் திரட்டும் இப்பகுதிகளில் அதிகம் நடைபெறுவதாகவும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினருக்கு மாமுல் வழங்கி எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவதும் மணல் கடத்தலில் ஈடுபடுவதும் இருந்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மணல்மேடு அடுத்த ராஜசூரியன் பேட்டையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு 2 காவலர்கள் சென்றுள்ளனர். அப்போது சாரயம் விற்பனை செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க தவறிய காவல்துறையினர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மேலத்தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து மதன்குமார் என்ற காவலர் அடித்ததாக கூறப்படுகிறது.
அதனை பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் தடுத்தும் காவலர் மதன்குமார், சுரேஷை அடித்ததால் உள்காயமடைந்த சுரேஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்மணி அருகில் இருந்தவர்களை அழைத்து சுரேஷை மீட்டு மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசூரியன் கிராமமக்கள் சாரய விற்பனையில் ஈடுபட்டவரை விட்டு விட்டு அப்பாவியை காவலர் தாக்கியதை கண்டித்து மணல்மேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரேஷ்சை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மணல்மேடு காவல்நிலையத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் ராஜசூரியன் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நீண்ட காலமாக நடைபெறும் ஒன்று என்றும், இவர்கள் வழக்கமாக மணல்மேடு காவல் நிலையத்திற்கு மாமுல் கொடுத்து வருவதாகவும், இதனால் காவல்துறையினர் இவர்களை கண்டு கொள்ளுவது இல்லை எனவும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தற்போது யாரோ புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து அவர்களின் மீது உள்ள கோபத்தில் அங்கு சென்ற காவல்துறையினர் ஆடு மேய்க்கும் ஏழை அப்பாவியை அடித்து துன்புறுத்தி உள்ளனர் என கருத்து தெரிவித்துள்ளனர்.