மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது
10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மயிலாடுதுறை பகுதிக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மூன்று பேர் சிசிடிவி காட்சிகளின் உதவி கொண்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த திவாஸ், ரகுமான் என்ற 2 இளைஞர்கள் தீபாவளியன்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு ஸ்ப்ளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கருவி முக்கூட்டு என்ற பகுதியில் அடையாளம் தெரியாத கார் மோதி விபத்திற்குள்ளாகினர். கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, திவாஸ் மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையிலும், ரகுமான் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட செம்பனார்கோயில் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரினை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தேடினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து ஏற்பட்ட இடத்தில் சேதமடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய பைக்கும் காணாமல் போனதால், என்னடா இது நமக்கு வந்து சோதனை? பைக் இல்லாமல் விபத்து வழக்குப்பதிவு செய்யமுடியாமல் போலீசார் தவித்தனர்.
இதையடுத்து, மீண்டும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, விபத்தில் சேதமடைந்த பைக்கினை அன்று மாலை 5 மணியளவில் 3 இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில் டோப் செய்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. (விபத்தில் சேதமடைந்த பைக்கில் ஒருவர் அமர்ந்து கொள்ள, மேலும், இரண்டு இளைஞர்கள் பல்சர் பைக்கில் அமர்ந்து ஓட்டியவாறு உதைத்துச் தள்ளிச் சென்றுள்ளனர்). 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மயிலாடுதுறை பகுதிக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
Tata IPO: முதல் நாளே 140% சதவீதம் லாபம்..ஜாக்பாட் கொடுத்த டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் - விவரம்!
இந்த சிசிடிவி பதிவுகளை கையில் வைத்துக்கொண்டு கடந்த 15 நாட்களுக்கு மேலாக பைக் திருடர்களை தேடி வந்த செம்பனார்கோவில் போலீசார் 15 நாட்களுக்குப் பிறகு, வாகனத்தை திருடிச்சென்றது மயிலாடுதுறை அருவாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான விக்னேஷ் என்பதையும், அவருக்கு துணையாக பைக்கை எடுத்துச் செல்ல உதவியாக இருந்தது மயிலாடுதுறை கூறைநாட்டைச் சேர்ந்த 25 வயதான நவீன்குமார், சோழசக்கரநல்லூர் உளுத்துக்குப்பை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அசோக் என்பதையும் ஒருவழியாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து, திருட்டுக்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, அந்த 3 இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற செம்பனார்கோவில் காவல்துறையினர், திருட்டு வழக்கு பதிவு செய்து பொறையாறு கிளைச் சிறையில் அடைத்தனர். காணாமல் போன இருசக்கர வாகனம் மீண்டும் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒருவழியாக விபத்து குறித்து 15 நாட்களுக்குப் பிறகு நேற்று வழக்குப்பதிவு செய்துள்ள செம்பனார்கோவில் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற காரை மீண்டும் தேடத் தொடங்கியுள்ளனர்.