மயிலாடுதுறை: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே காவல்துறையினர் திடீர் சோதனை... பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளும் சென்ற காவலர்கள்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி அருகே அதிரடி ‘சிறப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலினின் அதிரடி உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் தாலுக்கா காவல்துறையினர் இணைந்து மாவட்டம் தழுவிய அளவில் நேற்று (06.01.2026) "சிறப்பு வேட்டை" நடத்தினர்.
தீவிர சோதனை மற்றும் விழிப்புணர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே அதிக அளவில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அரசு மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு தரப்பினரில் எழுந்த கோரிக்கையை அடுத்து மாவட்ட காவல் துறையினர் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா அல்லது கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
சோதனையின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைச் சந்தித்த காவல்துறையினர், போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்தும் விரிவான விழிப்புணர்வை வழங்கினர்.
கடந்த ஆண்டின் அதிரடி புள்ளிவிவரங்கள்
இந்தச் சிறப்பு வேட்டையின் போது, கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
* சட்டவிரோத மது விற்பனை: கடந்த ஓராண்டில் மட்டும் மது விற்பனை தொடர்பாக 5,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* புகையிலை பொருட்கள்: குட்கா மற்றும் பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 652 வழக்குகள் பதியப்பட்டு, சுமார் 2,183 கிலோ அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
* கடைகளுக்கு சீல்: விதிகளை மீறி போதைப்பொருட்களை விற்பனை செய்த 30 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
* கஞ்சா ஒழிப்பு: கஞ்சா விற்பனை தொடர்பாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க பொதுமக்கள் தயங்க வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால், 10581 என்ற இலவச உதவி எண்ணிற்கு அழைக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.






















