மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!
கும்பகோணத்தில் தாயை வீட்டை விட்டு கணவன் போகச்சொன்னதால் மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடசந்தூர். இங்கு வசித்து வருபவர் அன்பழகன். இவருக்கு வயது 50. இவரது மனைவி ராணி. இவருக்கு வயது 38. அன்பழகன் – ராணி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கல்லூரி செல்கிறார். மற்றொரு மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். அன்பழகன் – ராணி தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்பகோணம் அருகே அமைந்துள்ள தேப்பெருமாநல்லூரில் வசித்து வருகின்றனர்.
அன்பழகனுடைய வீட்டில் அன்பழகன் குடும்பத்தினருடன் அவரது மாமியார், அதாவது ராணியின் தாய் மீனாட்சி ( அவருக்கு வயது 65) வசித்து வந்துள்ளார். மாமியார் தங்களுடனே இருப்பது அன்பழகனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மீனாட்சியை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மனைவி ராணியிடம் அன்பழகன் பல முறை கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினமும் கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அன்பழகன் தொழில் விவகாரமாக வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ராணியும், மீனாட்சியும் இந்த விவகாரத்தால் மிகவும் மனமுடைந்துள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் தாயும், மகளும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
பின்னர். வீட்டின் மாடிக்கு சென்ற தாயும், மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அன்பழகனிடமும் போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
தாயும், மகளும் ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பைனான்சியரின் மகனும், மகளும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்