கரூரில் அரசுப்பள்ளியிலேயே மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன்; வைரலான திருமண வீடியோ- மாணவன் கைது!
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டி உள்ளார். மேலும் தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் மாணவனுக்கு உடந்தையாக இருந்த பிற மாணவர்களுக்கும் டிசி வழங்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரை சேர்ந்த 16 வயதுச் சிறுமி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சக வகுப்பில் மனச்சனம்பட்டியை சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் பயின்று வருகிறார். மாணவனும், மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி காலை, மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டி உள்ளார். மேலும் தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தோகைமலை பேருந்து நிலையத்தில் மாணவனும், மாணவி சுற்றி திரிந்துள்ளனர். இதனைப் பார்த்த உறவினர்கள் மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் இந்த தகவலை தெரிவிக்க இது குறித்து பெண்ணின் உறவினர்கள், சிறுவனிடம் கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவே சிறுமி, சிறுவனுடன் மாயமாகியுள்ளார். இதுகுறித்துச் சிறுமியின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தொடர்ந்து தோகைமலை போலீசார் மாயமான சிறுவன், சிறுமியர் இருவரையும் இன்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் சிறுவனை குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கூடம் திறந்ததும் சிறுமியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவன், மாணவிக்கு தாலி கட்டி உள்ளதாகவும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சரியான முறையில் வழி நடத்தாமல் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
சிறுமியின் தந்தை கோரிக்கை
இதுகுறித்துச் சிறுமியின் தந்தை கூறும்போது, ’’பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே பள்ளி அமைந்துள்ளதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது. இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.