BELAGAVI MURDER : தலையின்றி தண்டவாளத்தில் கிடந்த இளைஞர்.. கர்நாடகாவில் ஒரு காதல் எதிர்ப்புக் கொலை!
கர்நாடகாவில் மகளை காதலித்த இஸ்லாமிய இளைஞரை கூலிப்படை வைத்து கொலை செய்த பெற்றோர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கானாபுரா ரயில்வே தண்டவாளத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த வாலிபர் பெலகாவியைச் சேர்ந்தவர் அர்பாஸ் அப்தாப் முல்லா. 24 வயதான இவர் பொறியியல் பட்டதாரி என்று தெரியவந்தது.
இதையடுத்து, அர்பாஸ் அகமதுவின் தாயார் நஜீமா ஷேக் காவல்துறையில் அளித்த புகாரில், தனது மகன் இந்து பெண் ஒருவரை காதலித்ததாகவும், இந்த உறவை விரும்பாத அந்த பெண்ணின் தந்தை தனது மகனை கொலை செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, போலீசார் இந்த விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது.
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த அர்பாஸ் அகமது இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் அர்பாசை காதலித்துள்ளார். தனது மகள் இஸ்லாமிய இளைஞரை விரும்புவதற்கு அந்த பெண்ணின் தந்தையும், தாயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும். இருவரும் அவர்களது காதலில் உறுதியுடன் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், பெண்ணின் பெற்றோர்களான ஈரப்பா பசவன்னே கும்பர் மற்றும் சுஷீலாவும் கானபுரம் தாலுகாவில் வட்டோலி கிராமத்தில் உள்ள ஸ்ரீராம்சேனா ஹிந்துஸ்தான் அமைப்பின் உறுப்பினர் மகாராஜா நாகப்பா என்ற பந்தலிக் முட்கேகரிடம் இந்த விவகாரத்தை கூறியுள்ளனர். மேலும், தங்கள் மகளை காதலிக்கும் இளைஞரை கொலை செய்யுமாறும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்காக மகாராஜா நாகப்பாவிற்கு பெரும் தொகை ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி குதுபுதீன் என்பவர் மூலமாக அர்பாசை பெலகவியில் இருந்து கானபுரத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கே வைத்து அர்பாசின் கைகளை பின்னால் கட்டி கடுமையாக தாக்கிய அவர்கள் அர்பாசின் செல்போனில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படங்களை அழித்ததுடன் அவரது சிம்மையும் உடைத்துள்ளனர்.
அவரது கழுத்திலும், முதுகிலும் கத்தியால் குத்திய அவர்கள் இறுதியில் அர்பாசை கொலை செய்து அவரது தலையை தனியாக துண்டித்துள்ளனர். பின்னர், அவரது உடலை கானாபுரம் ரயில்வே நிலையத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுன் முக்கிய குற்றவாளிகளான மகாராஜ் நாகப்பா, குதுபுதீன், மாருதி பிரஹ்லாத், மஞ்சுநாத் துகாரம், கணபதி ஞானேஸ்வரா, பிரசாந்த் கல்லப்பா, பிரவீன்சங்கர, ஸ்ரீதர் மகாதேவ் டோனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு மூலக்காரணமான பெண்ணின் பெற்றோரான ஈரப்பாவும், சுசீலாவையும் போலீசார் கைது செய்தனர். மகளின் காதலனை பெற்றோரே பணம் கொடுத்து கூலிப்படை நியமித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.