”30 நாளாக நடந்த பாசப்போராட்டம்” மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட தாய்..!
மகனுக்கு பிடித்த வெஜ் பிரியாணி, வேப்பர் பிஸ்கட்ஸ், முட்டை, மீன் என அனைத்து பொருட்களையும் வைத்து படைத்துவிட்டு , துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்துகொண்டார்
படப்பை அருகே 12 வயதுடைய மகன் இறந்த முப்பதாவது நாளில் தாயும், மகன் இறந்த அதே தேதி மற்றும் நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அளவு கடந்த பாசத்தினால் முப்பதே நாளில் தாயும் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.
தீ வைத்து தற்கொலை
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) :காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் ரிச்சர்ட் (வயது 37) மீனாட்சி (வயது 35) தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்தத் தம்பதிகளுக்கு 13 வயது ஜெஸ்ஸி என்ற மகளும் , 12 வயது டோனி என்ற மகனும் உள்ளனர். ரிச்சர்ட் ஒரகடத்திலும் மீனாட்சி தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள். சாலமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஜெஸ்ஸி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ஆத்தனஞ்சேரியில் உள்ள பள்ளியில் டோனி எட்டாம் வகுப்பும் படித்து வந்தார்.
இந்தநிலையில் டோனி சரியாக படிக்க வில்லை என அவர்களின் பெற்றோர்கள் கண்டித்ததின் விளைவாக, கடந்த ஜூன் மாதம் (25.06.2024 அன்று) மாலை 3:50 மணிக்கு பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். டோனியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ரிச்சர்ட் , மீனாட்சி, ஜெஸ்ஸி ஆகியோர்கள் தவித்து வந்தனர். மேலும் மகன் இறந்த தேதியில் இருந்து மீனாட்சி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அழுது கொண்டு வந்துள்ளார்.
தாய் தற்கொலை
கணவர் வேலைக்கும், மகள் பள்ளிக்கும் சென்றிருந்த வேளையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல், மகன் இறந்த அதே தேதியில் அதே நேரத்தில் மீனாட்சி, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மகனின் முப்பதாவது நாளில் மகனுக்கு பிடித்த வெஜ் பிரியாணி, வேப்பர் பிஸ்கட்ஸ், முட்டை, மீன் என அனைத்து பொருட்களையும் வைத்து படைத்துவிட்டு , துக்கம் தாங்காமல் 35 வயதுடைய தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியது.
மகன் மீது அளவு கடந்த பாசம்
வயதுக்கு வந்த பெண் பிள்ளையையும் கணவரையும், தனியாக தவிக்க விட்டு விட்டு, இறந்து போன மீனாட்சியின் மகன் பாசத்தை என்னவென்று கூறுவது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் புலம்பினர். மீனாட்சியின் சடலத்தை மணிமங்கலம் காவல் துறையினர் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
சிறு வயது மகன் இறந்த பிறகாவது காவல்துறையினர் சார்பில் ரிச்சர்ட் மீனாட்சி ஜெஸ்ஸி ஆகியோர்களுக்கு "கவுன்சிலிங்" அளித்திருந்தால், இப்படிப்பட்ட சம்பவம் ஏற்பட்டிருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)