Kallakurichi: மீண்டும் ஜெய்பீம் சம்பவம்: கள்ளக்குறிச்சியில் பட்டியலின மக்கள் மீது கொடூர போலீஸ் தாக்குதல்!
என்னை சுவர் பக்கம் திரும்பி நிற்க சொன்னார்கள். நாற்காலியில் ஏற்றி நிற்கவைத்து பிரகாஷ் மற்றும் தர்மராஜின் இரண்டு கட்டை விரல்களையும் தூண்களில் கட்டிவிட்டி அப்படியே இறக்கிவிட்டார்கள் - செல்வம்
ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பழங்குடி இன மக்கள் மீது காவல் துறையின் அதிகாரம் எப்படி அத்துமீறி செலுத்தப்படுகிறது என்பதை அப்பட்டமாக மக்கள் முன் வைத்தது.
இந்தப் படத்தை பார்த்த பின் எளியவர்கள் மீதான காவல் துறையின் வெறியாட்டத்திலும், அதிகாரவர்க்கத்தின் செயல்பாட்டிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சிறு நகர்வுகூட இதுவரை தென்படவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்ட சின்ன சேலத்தில் இருக்கும் தில்லை நகரில் வசிப்பவர்கள் பிரகாஷ்(25), தர்மராஜ் (35), பெரியசாமி(55), செல்வம்(55). இவர்கள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவன் சமூகத்தைச் சார்ந்த ஐவரை சட்டவிரோதமாக காவல்துறை கைது செய்து துன்புறுத்தியதாக Witness for Justice அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. pic.twitter.com/okH7CWgAqS
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) November 17, 2021
இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது இரவு 11.45 மணியளவில் 10க்கும் மேற்பட்ட சீருடை அணியாத சிறப்புப் படை காவல் துறையினர் இவர்களை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
எங்கு அழைத்து செல்கிறோம், எது தொடர்பான விசாரணை என எதுவும் அவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்காத காவல் துறையினர் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் இதுவரை கூறவில்லை. பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி தனது மூன்று குழந்தைகளுடன் கணவனை மீட்பதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
இவர்கள் மட்டுமின்றி இவர்களுடைய உறவினர்களான பரமசிவத்தையும், சக்திவேலையும் நேற்று காலை 15க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கின்றனர்.
விஷயம் வெளியில் கசிய ஆரம்பித்ததும் பரமசிவத்தையும், செல்வத்தையும் மட்டும் காவல் துறையினர் விடுவித்துள்ளனர். அதேசமயம் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் மீது தலா 13 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விவரங்களை தெரிவிக்க காவல் துறையினர் மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கொங்கரம்பாளையம் சேர்ந்த செல்வம் (48) காவல் துறையின் வன்முறை பற்றி பேசியுள்ளார். pic.twitter.com/nH6uBXBkab
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) November 17, 2021
காவல் துறையினரின் அராஜகம் குறித்து விடுவிக்கப்பட்ட செல்வம் பேசுவதை கேட்கையில் பதைபதைக்க வைக்கிறது. அவர் பேசியதாவது, “நானும் எனது மனைவியும் அந்த சாலையில் வியாபாரத்திற்காக மட்டும்தான் சென்று வந்திருக்கிறோம்.
என்னை சுவர் பக்கம் திரும்பி நிற்க சொன்னார்கள். நாற்காலியில் ஏற்றி நிற்கவைத்து பிரகாஷ் மற்றும் தர்மராஜின் இரண்டு கட்டை விரல்களையும் தூண்களில் கட்டிவிட்டி அப்படியே இறக்கிவிட்டார்கள். அவர்கள் கத்திய கதறல் இன்னமும் கேட்கிறது. இதை சொல்லும்போதே உயிர் போய்விடுகிறது” என காவல் துறையினர் செய்த பல அராஜகங்களை அச்சம் விலகாமல் பேசுகிறார்.
எத்தனை ஜெய் பீம்கள் வந்தாலும் எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும் காவல் துறையின் அடாவடித்தனம் சற்றும் குறையப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவம் மிக சமீபத்திய உதாரணம். மேலும் எளிய மக்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்துவிடும் இதுபோன்ற அராஜகத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டம் பிறப்பிக்க வேண்டுமென்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்