குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 16 % அதிகரிப்பு; டெல்லி இதில் முதலிடம் - அதிர்ச்சியூட்டும் என்.சி.ஆர்.பி ரிப்போர்ட் !
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில நாளிதழ்களில் வெளியான செய்தியின்படி, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 2020ல் ஒட்டுமொத்தமாக 1,28,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021ல் 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2020ம் ஆண்டை விட 16.2 சதவீதம் அதிகரித்துள்ளது. என்சிஆர்பியின் புள்ளிவிவரங்கள் தரும் தகவலின்படி ஒவ்வொரு குழந்தைக்கு எதிரான மூன்றாவது குற்றமும் POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
2021ம் ஆண்டில், POCSO சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 6 (ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமை மற்றும் மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் மொத்தம் 33,348 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் 33,036 சிறுமிகள் மற்றும் 312 சிறுவர்கள்.
இது தவிர குழந்தைகள் கடத்தல் வழக்குகள் 67,245 பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான 7,783 குற்றங்களுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பற்ற யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நாகாலாந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 2020ல் 28.9 சதவீதம் அது தற்போது அதிகரித்து 2021ல் 33.6 சதவீதமாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, ஆகஸ்ட் 26ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் எனவும், இரு ஆசிரியைகளும் சேலம் செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
நான்கு வாரங்களுக்கு பின், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
முதல் நான்கு வாரங்கள் நிபந்தனையை பூர்த்தி செய்த நிலையில், தற்போது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடும்படி நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்