கரூரில் வயதான தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
இரவு மகள்கள் செல்போனில் பேசியுள்ளனர். காலை முதல் அவர்கள் செல்போனை எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டினுள் கதவு தாழிடப்பட்டது.
கரூர் ஜவகர் கடைவீதி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 75). இவர் கரூர் வைசியா வங்கியில் கிளார்க் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்ரீ லக்ஷ்மி (வயது 70). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீலக்ஷ்மி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியை கணவர் ராமகிருஷ்ணன் தன்னுடைய பணி நிறைவு காலத்திற்கு பிறகு, மனைவி லக்ஷ்மிக்கு சமையல் உள்ளிட்ட பணிவிடைகள் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு இவரது மகள்கள் செல்போனில் பேசியுள்ளனர். காலை முதல் அவர்கள் செல்போனை எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்த போது வீட்டினுள் கதவு தாழிடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் சமையல் அறையிலும், மனைவி படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கரூர் மாநகர போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்கின்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் - பாதை பிரச்சனையால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
உப்பிடமங்கலம் அருகே பாதை பிரச்னையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட்டது. உப்பிடமங்கலம் அருகே உள்ள ராசா கவுண்டனூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 85). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரின் தோட்டத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (வயது 70). அவரின் தம்பி காத்தவராயன் (வயது 65) ஆகியோரின் தோட்டம் உள்ளது.
கோவிந்தசாமி மற்றும் கருப்பண்ணன், காத்தவராயன் ஆகியோருக்கு இடையே தோட்டத்திற்கு செல்லும் பொதுப் பாதை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிந்தசாமியின் மனைவி ராஜம்மாள் (வயது 75). வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதை அடுத்து கோவிந்தசாமி மற்றும் அவரின் உறவினர்கள் அந்தப் பாதையின் வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதனை அறிந்த கருப்பண்ணன் மற்றும் காத்தவராயன் ஆகியோர் அந்தப் பாதையில் தடைகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து, அந்தப் பாதையின் வழியாக தனது மனைவியின் உடலை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து தருமாறு வெள்ளியணை போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தாசில்தார் சிவக்குமார், வெள்ளியணை வருவாய் ஆய்வாளர் ஜெயவேல், ஒப்பிடமங்கலம் கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, வெள்ளியணை சப் இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பிரச்சனைக்குரிய பாதை வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்லாமல் மாற்றுப்பாதையில் எடுத்துச் செல்வதாக கோவிந்தசாமி மற்றும் அவருடைய மகன்கள் ராதாகிருஷ்ணன், ஜெயராமன் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். அதன்படி மூதாட்டி ராஜம்மாவின் உடலை மாற்று பாதையில் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.