(Source: ECI/ABP News/ABP Majha)
Crime | தலித் இளைஞரை தாக்கி சிறுநீர் குடிக்கச்செய்த கொடூரம்… எட்டு பேர் மீது வழக்குப்பதிவு…
அந்த 7 பேரும் நான் இறந்துவிட்டதாக நினைத்து திரும்பவும் தூக்கி சென்று கிராமத்தில் வீசிவிட்டு செல்போனை எடுத்துச் சென்றார்கள்" என்று அவர் கூறியதாக எஃப்ஐஆரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 25 வயது தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ருக்காசர் கிராமத்தில் வசிக்கும் ராகேஷ் மேக்வால் என்பவர் ஜனவரி 26 அன்று இரவு தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜனவரி 27 அன்று பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் பதிவின்படி, சம்பவம் நடந்த இரவில், ராகேஷ் மேக்வாலை, அவரது கிராமத்தைச் சேர்ந்த உமேஷ் ஜாட் என்பவர் வீட்டிற்குள் வந்து, மேக்வாலை தன்னோடு வரும்படி அழைத்திருக்கிறார். அதற்கு மேக்வால் மறுத்ததால், அவரை மேலும் ஏழு பேர் சேர்ந்து உமேஷின் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்றனர்.
"அந்த ஏழு பேரில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் என்னும் பெயர் கொண்ட வேறொருவரும் ராஜேஷ் என்பவரும் மது பாட்டிலை எடுத்து என்னை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர், பாட்டில் காலியான பிறகு, ராகேஷ், ராஜேஷ், உமேஷ், தாராசந்த், அக்ஷய், தினேஷ், பிடாதி சந்த் மற்றும் பீர்பால் ஆகியோர் அந்த பாட்டிலில் சிறுநீர் கழித்து என்னை குடிக்க வைத்தனர்.” என்று ரதன்கர் காவல் நிலையத்தில் மேக்வால் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் ராகேஷ் மேக்வாலின் சாதியை வைத்து அவதூறு வார்த்தைகளால் திட்டியதாகவும், தலித்துகளை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், 'தலித்துகள் ஜாட் சமூகத்தினருடன் மோதுவீர்களா? இதற்கெல்லாம் உங்களுக்கு பாடம் கற்பிப்போம்' போன்ற வார்த்தைகள் பயன்படுத்தினார்கள்” என்றும் வாக்குமூலம் அளித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
"அவர்கள் என்னை கம்பு மற்றும் கயிற்றால் அரை மணி நேரம் அடித்தனர், என் உடல் முழுவதும் காயம் ஆனது, குற்றவாளிகள் 7 பேரும் நான் இறந்துவிட்டதாக நினைத்து திரும்பவும் தூக்கி சென்று கிராமத்தில் வீசிவிட்டு செல்போனை எடுத்துச் சென்றார்கள்" என்று அவர் கூறியதாக எஃப்ஐஆரில் பதிவுசெய்யபட்டுள்ளது. ஹோலி பண்டிகையின் போது இசைக்கருவியை வாசிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களுக்கு ராகேஷ் மேக்வாலுடன் தனிப்பட்ட விரோதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். உமேஷ், ராஜேஷ், தாராசந்த், ராகேஷ், பீர்பால், அக்ஷய், தினேஷ் மற்றும் பிடாதி சந்த் ஆகிய 8 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் என். 143 (சட்டவிரோதமான கூட்டம்), 323 (காயப்படுத்துதல்), 365 (கடத்தல்), 382 (கொலை, காயம் ஏற்படுத்தித் திருடுதல்) ஐபிசியின் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மேக்வாலின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். “குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முயற்சிக்கிறோம். முதல் பார்வையில், மேக்வால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அவரை ஒத்த வயதுடையவர்கள் என்பதால் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, அவர் ஒரு இசைக்கருவியை இசைத்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட தரப்பு சில எதிர்கருத்துக்களை தெரிவித்ததாகவும், அது பகையை விளைவித்ததாகவும் ராகேஷ் மேக்வால் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். மேக்வால் இப்போது நன்றாக நடக்கிறார், அவரது முதுகில் முழுவதும் கயிற்றால் அடித்த காயங்கள் உள்ளன. மேக்வாலுக்கு சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை, விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்,'' என்று வழக்கை விசாரிக்கும் வட்ட அதிகாரி ரத்தன்கர் ஹிமான்ஷு ஷர்மா கூறினார்.