செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது
ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டை அருகே உள்ள வெங்கம்பாக்கம் செந்தமிழ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்ககுமார். இவருடைய மனைவி ராஜகுமாரி(53). இவர் நேற்று முன்தினம் இரவு, நாமக்கல்லில் முட்டை லோடு ஏற்றி வருவதற்காக லாரி உரிமையாளரும், டிரைவருமான வெங்கம்பாக்கம் துலுக்காணம் கோயில் தெருவை சேர்ந்த தட்சணா மூர்த்தியின் மகன், உதய குமார் (35) என்பவரிடம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து அனுப்பி உள்ளார். இதையடுத்து உதயகுமார் சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு லாரியில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி லேபையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கும்போது 4 பேர் அடங்கிய மர்ம கும்பல், தன்னைத் தாக்கிவிட்டு, 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக ராஜகுமாரிக்கு தொலைபேசி மூலம் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜகுமாரி அருகிலுள்ள வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது வழக்கறிஞர் மூலம் ரோசணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் வள்ளி, உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வினோத்ராஜ் ஆகியோர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.
விசாரணையில், உதயகுமார் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்ததாவும், கடந்த 6 மாதங்களாக வறுமையில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால், முட்டை வாங்க கொடுத்த பணத்தை அபேஸ் செய்வதற்காக அந்த பணத்தை மறைத்து வைக்க அவரது நண்பர்களான வெங்கம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக், சேகர் ஆகியோரிடம் பணத்தை பிரித்து கொடுத்துள்ளதும், பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி பணத்தை பறித்துச் சென்றதாக நாடகமாடியதும் தெரியவந்தது. போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை செய்து பணத்தை கைப்பற்றினர், இதையடுத்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் காவல் நிலையம் வந்து விசாரணை செய்து ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை ராஜ குமாரியிடம் ஒப்படைத்தார். பணத்தை தானே மறைத்து வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நாடக மாடிய உதயகுமார் மீது ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்திய போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.