‘இவன்தான் நான் ஜெயிலுக்கு போக காரணமானவன்’ ; திண்டுக்கல் அருகே தொழிலாளி கொடூர கொலை..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டை சேர்ந்தவர் மனோஜ்(26). இவர் மீது பல்வேறு கொலை முயற்சி, திருட்டு, அடிதடி வழக்குகளும் இரண்டு குண்டர் தடுப்புச் சட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த பங்குனி மாதம் ஊர் திருவிழாவின்போது ரகளையில் ஈடுபட்டு அடிதடி தகராறில் ஒருவரை கத்தியால் வெட்டியதில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஜாமீனில் வந்த மனோஜ் வழக்கம்போல தனது நண்பருடன் குடித்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள முத்தாலம்மன் கோவில் பின்புறம் அமர்ந்து மனோஜ் (26) அவரது நண்பர் அன்பு (25) மது அருந்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக செங்கள் காலவாசலில் வேலையைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜ்குமாரை வழிமறித்து இவன்தான் நான் ஜெயிலுக்கு போக காரணம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ராஜ்குமாரை கீழே தள்ளி ஒருவர் அவரது கால்களை பிடித்துக் கொள்ள மற்றொருவர் அவர் மீது ஏறி உட்கார்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் நேரில் பார்வையிட்டு உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். நண்பர்கள் இருவர் குடிபோதையில் கூலித் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்