மயிலாடுதுறையில் தொடரும் மரணக் குழிகள்: 18 ஆண்டுகாலமாக அச்சத்தில் பயணிக்கும் மக்கள்..
மயிலாடுதுறை நகராட்சியில் 2007 முதல் அமலில் உள்ள பாதாள சாக்கடைத் திட்டக் குறைபாடுகளால் மீண்டும் இன்று சாலைகள் உள்வாங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டம், தற்போது பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. முறையற்ற பராமரிப்பு மற்றும் கட்டுமானக் குறைபாடுகளால் நகரின் முக்கியச் சாலைகள் அடிக்கடி உள்வாங்கிப் பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று தரங்கம்பாடி சாலையில் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாக இருந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டத்தின் பின்னணியும் தற்போதைய நிலையும்
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளையும் உள்ளடக்கி, கடந்த 2007-ஆம் ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நகராட்சி நிர்வாகம் இதனைத் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரித்து வருகிறது. தொடக்கத்தில் 10,000 இணைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், தற்போது கொள்ளளவுக்கு அதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"திட்டம் அமல்படுத்தப்பட்ட போதே தரமற்ற குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதல் இணைப்புகள் வழங்கப்பட்டதால், அழுத்தம் தாளாமல் குழாய்கள் அடிக்கடி உடைந்து மண்ணரிப்பு ஏற்படுகிறது," எனச் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
உள்வாங்கும் சாலைகள்: ஒரு தொடர் அபாயம்
கடந்த சில ஆண்டுகளாக மயிலாடுதுறையின் பிரதான சாலைகள் திடீரென உள்வாங்கி ராட்சத பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை நகரின் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, கச்சேரி ரோடு மற்றும் கண்ணாரத் தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலை, தரங்கம்பாடி சாலை மற்றும் தைக்கால் தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி மற்றும் திருவாரூர் சாலை இந்த இடங்களில் சாலைகள் திடீரெனப் பிளந்து பள்ளம் ஏற்படுவதும், பின்னர் நகராட்சி சார்பில் தற்காலிகமாகச் சீரமைக்கப்படுவதும் தொடர்கிறது. நிரந்தரத் தீர்வு காணப்படாததால், சீரமைக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் பள்ளங்கள் உருவாவது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் பள்ளம்
இன்று மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி நோக்கிச் சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சின்னக்கடைத் தெரு அருகே லாரி கடந்தபோது, பாதாள சாக்கடை குழாய் உடைந்திருந்த பகுதியில் திடீரெனச் சாலை உள்வாங்கியது. இதில் லாரியின் சக்கரம் நல்வாய்ப்பாக பள்ளத்தில் சிக்காததால் யாருக்கும் காயங்களோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இருப்பினும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் பதற்றத்தை உருவாக்கியது. விபத்தைத் தொடர்ந்து தரங்கம்பாடி சாலையிலான போக்குவரத்து உடனடியாக மாற்றியமைக்கப்பட்டு, வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சித் தலைவர் செல்வராஜ் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது போர்க்கால அடிப்படையில் பள்ளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுகாதாரச் சீர்கேடும் நீர்நிலை பாதிப்பும்
பாதாள சாக்கடைப் பிரச்சனை வெறும் போக்குவரத்துத் தடையோடு நின்றுவிடவில்லை. 36 வார்டுகளிலும் அவ்வபோது குழாய் அடைப்பு காரணமாகக் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்குவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் கவலையளிக்கும் விஷயமாக, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரி ஆறு, பாசன வாய்க்கால்கள் மற்றும் பொதுக் குளங்களில் கலப்பதால் மயிலாடுதுறையின் நிலத்தடி நீர் ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் நகராட்சி வழங்கும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்துப் பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஆய்வு செய்தும், இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான தீர்வும் எட்டப்படவில்லை என்பது வேதனையான நிதர்சனம்.
பொதுமக்கள் கோரிக்கை
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகள்
* முழுமையான மறுசீரமைப்பு: 18 ஆண்டுகாலப் பழைய மற்றும் பழுதடைந்த குழாய்களை அகற்றிவிட்டு, தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய நவீன குழாய்களைப் பதிக்க வேண்டும்.
* நிரந்தரத் தீர்வு: தற்காலிகமாகப் பள்ளங்களை மூடுவதைத் தவிர்த்து, வல்லுநர்களின் ஆலோசனையின்படி தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய வேண்டும்.
*சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை நகரின் உட்கட்டமைப்பு சீர்குலைந்து வரும் நிலையில், தமிழக அரசு தலையிட்டு இந்தப் பாதாள சாக்கடைப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
























