Zomato Executive Harrassed : ’இந்த உணவு தீண்டத்தகாதது’: ஜொமாட்டோ ஊழியரிடம் ஜாதியை சொல்லி துன்புறுத்திய கொடூரம்..
உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜொமாட்டோ ஊழியரைத் தாக்கிய பிறகு, அவரை சாதிய ரீதியாக திட்டியும், அவர் முகத்தில் எச்சில் துப்பியும் உள்ளார் அந்த வாடிக்கையாளர் நபர். தனது ஆர்டரை நிராகரித்ததோடு, ஜொமாட்டோ ஊழியரைத் `தீண்டத்தகாதவர்’ எனவும் அந்த வாடிக்கையாளர் திட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பணியாற்றி வரும் ஜொமாட்டோ ஊழியரான வினீத் குமார் தனக்கு வந்த உணவு ஆர்டரை டெலிவரி செய்ய எடுத்துச் சென்றுள்ளார். அப்போது டெலிவரி தந்த போது, உணவை ஆர்டர் செய்த வாடிக்கையாளர் வினீத் குமாரிடம் அவரது பெயரையும், அவரது சாதியையும் கேட்டுள்ளார். `நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என அவருக்குத் தெரிய வந்ததும், என்னைக் கடுமையாக சாதி ரீதியாகத் திட்டினார். மேலும், தீண்டத்தகாதவனின் கையில் இருந்து உணவு டெலிவரியைப் பெற போவதில்லை எனவும் கூறியினார். நான் அவரிடம் ஆர்ட்ர் வேண்டாம் என்றால் கேன்சல் செய்யுமாறு கூறினேன்’ எனக் கூறியுள்ளார் வினீத் குமார்.
தொடர்ந்து தன்னைத் திட்டி, தனது முகத்தில் எச்சில் துப்பியதோடு, 10 முதல் 12 நபர்களை அழைத்து வந்து தன்னைத் தாக்கியதாகவும், தனது இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார் வினீத் குமார். இவரது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ கிழக்குப் பகுதிக் காவல்துறை கூடுதல் ஆணையர் காசிம் ஆபிதி இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதையும், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது பட்டியல் சமூகத்திற்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் செய்தவரை விரைவில் பிடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் தனது வாக்குமூலத்தில் வினீத் குமார், `அவர்கள் எனது இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றனர். நான் காவல்துறையை அழைத்தேன். அப்போது காவல்துறையினர் அங்கு விரைந்து, எனது வாகனத்தை மீட்டுக் கொடுத்தனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜொமாட்டோ நிறுவனத்தில் வினீத் குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக உணவு டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்