Crime : விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை... போராட்டத்தில் குதித்த சக மாணவர்கள்... கேரளாவில் பரபரப்பு...!
கேரளாவில் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : கேரளாவில் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அமர் ஜோதி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாம் ஆண்டு உணவு தொழில்நுட்ப பிரிவில் மாணவி ஸ்ரத்தா (20) படித்து வந்துள்ளார். திருவாங்குளத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரது அறையில் தூக்கில் தொங்கியப்படி காணப்பட்டார். உடனே இதனை அறிந்த சக மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரத்தாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காரணம்
கல்லூரி மாணவி ஸ்ரத்தா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, இதற்கான காரணம் குறித்து சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஸ்ரத்தா குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவரது செல்போனை கல்லூரி நிர்வாகம் வாங்கி வைத்துக் கொண்டது. பின்னர், துறைத் தலைவர் அவரை அறைக்கு அழைத்து பேசியுள்ளார். பின்பு, ஸ்ரத்தாவை துன்புறுத்தியும் உள்ளதாக கூறப்படுகிறது.
2 நாட்கள் மொபைல் போனை வைத்துக் கொண்டு தராமல் இழுத்தடித்துள்ளனர். மேலும், பெற்றோரை அழைத்து வந்தால் தான் செல்போனை தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த மாணவி ஸ்ரத்தா தற்கொலை செய்துக் கொண்டதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் குதித்த மாணவிகள்
மாணவி தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து, கல்லூரி மூடப்பட்டு, விடுதியில் இருந்து மாணவிகள் வெளியேறியுள்ளனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பு சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை நிறுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளுமுள்ளும் நடந்தது.
இந்நிலையில், கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து, மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்பின்னர், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் மாணவர்களின் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், ”கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி காப்பாளரை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்பிரிவு விசாரணை மேற்கொள்ளும்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)