மனைவியிடம் தொடர்ந்து வம்பு செய்த காவலர்...காண்டாகி கிரிக்கெட் பேட்டால் பெண்டு எடுத்த சககாவலர்!
கோவையில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய வழக்கில் மற்றொரு காவலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டிற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. முருகானந்தம் அவருடைய 34 வயது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவைப்புதூரில் உள்ள பட்டாலியன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது, முருகானந்தம் குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் காவலர் 32 வயதான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர்.
சில மாதத்துக்கு முன்பு, முருகானந்தம் தனது பணி விஷயமாக டெல்லி சென்றுள்ளார். அதே சமயத்தில், ராமச்சந்திரனின் மனைவி கடந்த நவம்பரில் 2வது பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். ராமச்சந்திரன் வீட்டில் தனிமையில் இருந்ததால் முருகானந்தத்தின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டு ஆசைவார்த்தைகூறி பழகி வந்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்ப சூழல் கருதி முருகானந்தத்தின் மனைவி, ராமச்சந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ராமச்சந்திரன் முருகானந்தத்தின் மனைவியை டார்ச்சர் செய்து தன்னி டம் நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாத முருகானந்தத்தின் மனைவி தனது கணவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராமச்சந்திரனை முருகானந்தம் கண்டித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம்,கிரிக்கெட் மட்டையை கொண்டு ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது ராமசந்திரன் தப்பியோடியபோதும் விடாமல் துரத்தி சென்று காவலர் கேண்டீனில் வைத்து தாக்கியுள்ளார். சக போலீசார் அவரை தடுத்து, காயமடைந்த ராமச்சந்திரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து, ராமசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், முருகானந்தம் மனைவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், "ராமச்சந்திரன் மனைவியும் நானும் தோழிகள். அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது எனது வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். தொடர்ந்து மிரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராமச்சந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்