Thiruvanmiyur Railway Robbery: எல்லாமே நாடகம் - சென்னை ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்! சிக்கிய ஊழியர்!!
சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது
சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் ரயில்வே ஊழியரே திட்டமிட்டு ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது. கவுண்டரில் உள்ளவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகவும், கவுண்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. எஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் ரயில்வே ஊழியரான டீக்காராமே கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து டீக்காராம் இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளை தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் டீக்காராம் சிக்கியுள்ளார்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாத நிலையில் ரயில் நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் டீக்காராமின் மனைவி ரயில் நிலையத்துக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் டீக்காராம் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடன் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் திக்குமுக்காடிய அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
தன்னுடைய மனைவியை வரவழைத்து டிக்கெட் கவுண்டரில் உள்ள பணத்தை டீக்காராமே எடுத்துக் கொடுத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் டீக்காராம் மற்றும் அவரது மனைவியை தவிர வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக, பொது இடத்தில் பலரின் கண்முன் நடந்த ஸ்வாதி படுகொலைக்குக் காரணமானவரைக் கண்டுபிடிக்கும் படலத்தில், சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. அதிக மக்கள் நடமாடும் ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லையா எனப் பலரும் கேள்வி எழுப்பினர். நீதிமன்றமும் இதுகுறித்துச் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. நீதிமன்றமே அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் என்று அறிவுறுத்தியும் அங்கு கேமரா பொருத்தப்படவில்லை. ஸ்வாதி கொலை நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்